ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 57.
சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய கேளம்பாக்கம் சிவன் கோவிலில் இருந்த அவர் அதிகாலையில் இறந்துவிட்ட செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் முதலில் நம்ப மறுத்தார்கள். மயில்சாமி தன் மூத்த மகன் அருமைநாயகத்தை சினிமா துறைக்கு அழைத்து வந்தார்.
Mayilsamy:விவேக் போன்றே மயில்சாமியும் திடீர் மரணம்: சிரிக்க வைத்தவர்களுக்கு இப்படியொரு முடிவா?
அருமைநாயகத்தின் பெயரை அன்பு என மாற்றினார்கள். ஆனால் அன்புவின் நடிப்பில் உருவான படங்கள் கைவிடப்பட்டன, மேலும் சில படங்கள் ரிலீஸாகவும் இல்லை. இந்நிலையில் அன்புவுக்கு மயில்சாமி திருமணம் செய்து வைத்த முறை பற்றி ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அருமைநாயகம் என்கிற அன்புவுக்கு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவும்,, தமிழக சட்டசபையின் துணை சபாநாயகருமான கு. பிச்சாண்டியின் இளைய மகளை தான் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
அன்புவின் திருமணம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தான் நடந்தது. தன் மகனுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்து அனைவரையும் வியக்க வைத்தார் மயில்சாமி. தன் சம்பந்தி ஒரு பெரிய ஆள், நான் பிச்சாண்டி மகளின் மாமனார் என எங்குமே பெருமை அடித்தது இல்லை மயில்சாமி.
மனதில் பட்டதை பேசுவார், செய்வார். அப்படி ஒரு முறை பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அவர் செய்த காரியம் வைரலாகிவிட்டது. திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மயில்சாமி, மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக அளித்து மத்திய அரசுக்கு தன் கண்டனத்தை தெரிவித்தார். அவரின் துணிச்சலை ரசிகர்கள் பாராட்டினார்கள்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் மயில்சாமி. தன் நெஞ்சில் குடியிருக்கும் ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். என சந்தோஷமாக சொல்லி வந்தார். ஆனால் அதே எம்.ஜி.ஆர். துவங்கிய அதிமுகவை மயில்சாமி கடுமையாக விமர்சிக்கவும் செய்தார்.
படங்களில் நடிப்பதோடு நின்றுவிடாமல் தன்னால் முடிந்த உதவியை பிறருக்கு செய்து வந்தார். தான் உதவி செய்வதை வெளியே சொல்லி பெருமைப்படாதவர் அவர். உதவி செய்ய காசு பணம் பார்க்காதவர்.
Mayilsamy: கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்த மயில்சாமி: நிறைவேற்றி வைப்பாரா ரஜினி?
சத்தமில்லாமல் உதவி செய்து வந்த மயில்சாமியின் கடைசி ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது. கேளம்பாக்கத்தில் இருக்கும் மேகநாதேஸ்வரர் கோவிலில் அமைந்திருக்கும் சிவலிங்கத்திற்கு ரஜினிகாந்த் பாலாபிஷேகம் செய்ய வேண்டும், அதை கண் குளிர பார்க்க வேண்டும் என்பதே மயில்சாமியின் கடைசி ஆசை ஆகும்.
அந்த ஆசை குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார் டிரம்ஸ் சிவமணி. இந்நிலையில் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த், அவரின் கடைசி ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளார்.
Rajinikanth, Mayilsamy:மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்: ரஜினி வாக்குறுதி
ரஜினி கூறியதை கேட்ட மயில்சாமி ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள். மயில்சாமியின் கடைசி ஆசை இவ்வளவு சீக்கிரம் நிறைவேறப் போகிறது என்பதில் மகிழ்ச்சி. அந்த திருவண்ணாமலையார் தான் இதற்கு காரணம் என்கிறார்கள் ரசிகர்கள்.
திருவண்ணாமலையார் மீது அதிக பக்தி கொண்டிருந்தார் மயில்சாமி. தனக்கு தெரிந்தவர்களை எல்லாம் திருவண்ணாமலை கோவிலுக்கு அழைப்பார். அப்படித் தான் டிரம்ஸ் சிவமணியையும் திருவண்ணாமலையார் கோவிலில் வாசிக்க வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.