கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்போது முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மருதானை – டெக்னிக்கல் சந்திப்பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஏராளமான பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நான்காம் இணைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் முகமாக கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் ஒல்கொட் மாவத்தை முற்றாக மறைக்கப்பட்டுள்ளது.
ஏராளமான பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை பிரயோக வண்டிகளும் ஸ்தலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் டெக்னிக்கல் சந்தியில் உள்ள டெக்னிக்கல் கல்லூரிக்கு முன்பாக ஒன்று கூடியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மூன்றாம் இணைப்பு
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்வதற்காக டெக்னிக்கல் சந்திக்கு பெருந்திரளானோர் வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும் சீரற்ற காலநிலை காரணமாக ஆர்ப்பாட்ட பேரணியானது இதுவரையில் ஆரம்பமாகவில்லை எனவும் தெரியவருகிறது.
இரண்டாம் இணைப்பு
கொழும்பில் இன்றைய தினம் (20.02.2023) போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், வீதியில் பயணிக்கும் மக்களுக்கு அல்லது பொதுச் சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் அல்லது இடையூறுகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பின் பிரகாரம் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தில் பொலிஸார் ஒருபோதும் தலையிட மாட்டார்கள். ஆனால் சிலர் தற்போதுள்ள சட்டத்திற்கு எதிராக செயற்படுகிறார்கள்.
குறிப்பாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என்று கூறுகிறோம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதலாம் இணைப்பு
பெருந்தொகையான மக்களுடன் கொழும்பிற்கு வந்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று (20.02.2023) மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதி பிற்போடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கொழும்பை ஐக்கிய மக்கள் சக்தி முற்றுகையிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
தேர்தலை பிற்போடுவதற்கான காரணம்
மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடப்படுவது பணப்பற்றாக் குறையினால் அல்ல, நாட்டை ஆளும் ஜனாதிபதிக்கோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கோ மக்கள் இல்லாத காரணத்தினாலேயாகும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எந்த வகையிலாவது நிறுத்துவதற்கு நாட்டின் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் வரை ஐக்கிய மக்கள் சக்தி போராடும் என குறிப்பிட்டிருந்தார்.
You May Like This Video