கனவுகளை விரட்டிப் பிடிக்க வயது என்றுமே தடையில்லை. எப்போது வேண்டுமானாலும் துணிவோடு உங்களது கனவுகளை நிஜமாக்கலாம். அப்படி தன்னுடைய ரைடர் கனவை தற்போது நிறைவேற்றி இருக்கிறார், மலையாள நடிகை மஞ்சு வாரியர்.
44 வயதான மஞ்சு, கொச்சியில் உள்ள ஷோரூம் ஒன்றில் பி.எம்.டபிள்யூ பைக்கை வாங்கி இருக்கிறார். அதற்கான செயல்முறைகளை முடித்து மகிழ்ச்சியுடன் அதனை ஓட்டும் வீடியோவை, தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “தைரியத்துடன் எடுத்து வைக்கும் ஒரு சிறிய அடியும், எப்போதும் நல்ல தொடக்கத்துக்கானது. ஒரு நல்ல ரைடர் ஆவதற்கு முன் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் நான் சாலைகளில் தடுமாறுவதை நீங்கள் கண்டால், தயவு செய்து பொறுமையாக இருங்கள். என்னை போன்ற பலருக்கு உத்வேகமாக இருக்கும் நடிகர் அஜித் குமாருக்கு நன்றி’’ என பதிவிட்டுள்ளார்.
திரைத்துறை பிரபலங்கள் பலரும் மஞ்சு வாரியாருக்கு வாழ்த்துகள் தெரிவித்த நிலையில், நடிகர் மாதவன் அந்த வீடியோவிற்கு ரியாக்ட் செய்து, ’பாதுகாப்பாக ரைட் செய்யுங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடிகர் அஜித் குமாரும், மஞ்சு வாரியாரும் பைக் ரைடர்களுடன் காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. நடிகர் அஜித் குமார் தங்களை வழிநடத்தியது, பாதுகாப்பு நடைமுறைகளை கற்றுக்கொடுத்தது குறித்த அனுபவங்களை, மஞ்சு தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அன்றிலிருந்து தனக்கான பைக் கனவை கொண்டிருந்தார். கடந்த மாதம் ஓட்டுநர் உரிமத்தையும் பெற்றார். இப்போது பி.எம்.டபுள்யூ பைக் அவர் வசம்!
வாழ்த்துகள் மஞ்சு வாரியர்!