ஆதியோகி முன்பு தேவாரம் பாடும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு!

மஹாசிவராத்திரி விழாவில் சத்குரு அறிவிப்பு “பக்தி நயம் ததும்பும் தேவாரம் பாடல்களை ஆதியோகி முன்பு பாடி அர்ப்பணிக்கும் குழந்தைகளுக்கு தினமும் சிறப்பு பரிசு வழங்கப்படும்” என சத்குரு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தேவாரம் ஆழமான பக்தி மற்றும் உயிரோட்டத்தை வளர்த்து, இந்த தன்மைகளை ஒருவரது வாழ்வின் அடித்தளமாக்குகிறது. ஆதியோகி முன் தேவாரம் பாடும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தினமும் சிறப்புப் பரிசுகளை வழங்க உள்ளோம்! தமிழ்நாட்டுக் குழந்தைகள் தங்கள் ஆழமான கலாச்சாரத்தை அறியவேண்டும்” என கூறியுள்ளார்.

முன்னதாக, இது தொடர்பாக ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் சத்குரு அவர்கள் பேசுகையில், “12 வயதுக்கு கீழ் உள்ள தமிழ் குழந்தைகள் நம் நாட்டில் எங்கிருந்தாலும், வெளி நாடுகளில் இருந்தாலும் இங்கு வந்து தேவாரப் பாடல் பாடினால் அவர்களுக்கு சிறப்பு பரிசு அளிக்கப்படும். இது ஆண்டு முழுவதும் எந்த நாளிலும், தமிழ் குழந்தைகள் எங்கிருந்து வந்தாலும் ஆதியோகி முன்பு தேவாரம் பாடிவிட்டு அவர்கள் பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம். கிராமங்கள்தோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தேவாரம் கற்றுக்கொண்டு ஆதியோகி முன்பு தேவாரம் பாட நீங்கள் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நாம் அனைவரும் நிகழ செய்ய வேண்டும்” எனக் கூறினார்.

மஹாசிவராத்திரி விழாவில் ‘தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்’ என்ற தேவாரப் பாடலுடன் துவங்கியது. அதேபோல் விழா நிறைவு பெறுவதற்கு முன்னரும் ‘மாதர் பிறை கண்ணி யானை’ என்ற தேவாரப் பாடல் பாடப்பட்டது. ஈஷாவில் உள்ள சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்களுக்கு தேவார, திருவாசகப் பாடல்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதேபோல் அந்த மாணவர்கள் பாடி சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா வெளியிட்ட தேவார பாடல் ஆல்பம் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு அனைவராலும் வெகுவாக பாராட்டபட்டது குறிப்பிடத்தக்கது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.