ஜெய்பூர்: “சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை வெறும் நாடகம் என்று மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்” என ராஜஸ்தான் முதல்வர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறுவதற்கு முன்பாக அவர்கள் (பாஜக) என்ன செய்தியை சொல்ல விரும்புகிறார்கள்? சத்தீஸ்கரில் நடந்த சோதனைகளை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.
காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவரும் கோபமடைந்துள்ளனர். இவைகள் எல்லாம் வெறும் நாடகம் தான் என்று நாட்டுமக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
இதனால் எல்லாம் காங்கிரஸ் கட்சி பயந்துவிடும் என அவர்கள் நினைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து போராடியுள்ளது. அதனால் பல காங்கிரஸ் தலைவர்கள் சிறை சென்றுள்ளனர். இதற்கு எதிராகவும் நாங்கள் போராடுவோம். பாஜக தலைவர்களின் பகைமை அவர்களுக்கு எதிராக பலமாக வேலை செய்யும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஸ்கரில் பல கோடி மதிப்புள்ள நிலக்கரி ஊழல் புகார் தொடர்பாக அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தினர். பிலாய் எம்எல்ஏ தேவேந்திர யாதவ், சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொருளாளர் ராம்கோபால் அகர்வால் உள்ளிட்டோருக்கு சொந்தமான 12 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது. பூபேஷ் பாகலுக்கு நெருக்கமாக உள்ள தலைவர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. நாக்ரீக் அபூர்த்திநிகம், சன்னி அகர்வால் கர்மாகர் மண்டல்,ஆர்.பி.சிங், வினோத் திவாரி வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
தற்போது நீதிமன்ற காவலில் உள்ள சூர்யகாந்த் திவாரியிடமிருந்து ராம்கோபால் அகர்வால் ரூ.52 கோடி பெற்றதற்கான வலுவான ஆதாரங்கள் அமலாக்கத்துறை வசம் உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்தநிலையில் சோதனை நடத்தப்பட்டிருப்பது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.