ஈரோடு கிழக்கு : வாக்கு வேட்டை Vs லைக்ஸ் வேட்டை- சிக்கிய தென்னரசு – செஞ்சுவிட்ட நெட்டிசன்கள்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும் வழக்கம் போல் நெட்டிசன்கள் இதையும் கண்டண்ட் ஆக்கி கொண்டாடி வருகின்றனர்.

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சுவாரஸ்யமான சம்பவங்களை மீம்ஸ்களாக, ட்ரோல் வீடியோக்களாக சமூக வலைதளங்களில் உலவ விடும் நெட்டிசன்களிடம் தற்போது வகையாக சிக்கியுள்ளார் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு.

அதிமுகவில்
எடப்பாடி பழனிசாமி
தரப்பு வேட்பாளரை அறிவிக்க தாமதித்து வந்த போது தென்னரசு தான் அறிவிக்கப்படுவார் என்று அதிமுக தொண்டர்கள் பலரும் யூகித்து விட்டனர். ஏற்கெனவே தொகுதியில் வெற்றி பெற்றவர், அனைத்து தரப்பு மக்களிடமும் நன்றாக பழகக் கூடியவர், யாராலும் எளிதாக அணுகக் கூடியவர், தொழிற்சங்கங்களுக்கு நெருக்கமானவர் என தென்னரசு குறித்து பாசிட்டிவ் நோட் வாசித்தார்கள் தொகுதிவாசிகள்.

இந்த ஹைலைட்ஸ் எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை, ஒரு சின்ன வீடியோ கிடைத்தால் போதும் அவருக்கு கும்பாபிஷேகம் செய்துவிடுவோம் என்று மொபைல் டேட்டாவை ஆன் பண்ணி கெத்து காட்டுகிறார்கள் நெட்டிசன்கள்.

தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து கும்பிட்ட கைகளை இறக்கவே இல்லை தென்னரசு. முன்னாள் அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக் கட்சி தலைவர்கள் என யாருடனாவது தொடர்ந்து வாக்கு வேட்டை ஆடிவருகிறார். நாள் முழுவதும் ஓடியோடி வாக்கு சேகரிக்கும் தென்னரசு கையை கும்பிட்டபடியே கண் அயர்ந்து தூங்கிவிட உஷாராக பிடித்துக் கொண்டனர் நெட்டிசன்கள்.

பாஜக தலைவர் அண்ணாமலை தென்னரசுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். அண்ணாமலை திமுகவை வார்த்தைகளால் தூக்கி போட்டு தூர்வாரிக்கொண்டிருந்த போது பக்கத்தில் இருந்த தென்னரசு தூங்கி விழுந்தார். இந்த காட்சிகளை வெட்டி டிரோல் செய்து வருகின்றனர். இந்த வீடியோவை எடிட் செய்து பதிவேற்றுபவர்கள் தென்னரசுவை கூட விட்டுவிடுகின்றனர். அவரை வைத்து அண்ணாமலையின் பேச்சை தான் பயங்கரமாக விமர்சித்து வருகின்றனர்.

இது போதாதென்று எடப்பாடி பழனிசாமியும் திறந்த வேனில் தென்னரசுவை அருகில் வைத்து கொண்டு தேர்தல் பெர்ஃபாமன்ஸ் செய்து கொண்டிருந்த போது அவரோ மக்கள் மனநிலையை தனது கண்ணில் காட்டினார். மீண்டும் தூங்கி விழுந்த தென்னரசு நல்ல வேளையாக எடப்பாடி பழனிசாமியை இடிக்கும் முன் சுதாரித்துக் கொண்டார்.

பிரச்சாரத்தில் தூங்கிவிழும் தென்னரசு ஒருவேளை சட்டமன்றத்துக்கு சென்றால் மேசை தட்டும் சத்தத்துக்கு கூட எழுந்திருக்க மாட்டார் என கமெண்ட் தட்டிவிடுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.