ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இது மொழி, பண்பாட்டு பன்மையையும் உலகின் பல மொழிகளையும் மேம்படுத்தலுக்கான விழிப்புணர்வை வென்றெடுக்கவும் கொண்டாடப்படுகிறது. உலக மக்கள் மொழிகளைப் பேணி வளர்த்தலையும் பாதுகாத்தலையும் வென்றெடுக்கும் விரிவான முன்முயற்சியின் ஒரு பகுதியே தாய் மொழி தினம் கொண்டாட்டம் ஆகும். பிப்ரவரி 21ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாக அனுசரிப்பது குறித்து கடந்த 1999ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பில் நடைபெற்ற, பொது மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 2000ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச தாய்மொழி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உலக தாய்மொழி தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், மனிதரின் சிந்தனையைத் தீர்மானிப்பது அவரது தாய்மொழியேயாம். எத்தனை மொழிகளும் தத்தம் விருப்பத்தில் கற்றுக்கொள்ளலாம். அத்தனையிலும் அன்னை போல் இருப்பதால்தான் ஒரு மொழிக்கு மாத்திரம் தாய்மொழி என்று பேர். சிந்திப்பதை சொல்லில் வெளிப்படுத்தும் அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.