சிட்னி: ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர், அங்குள்ள சட்டங்களை ஏமாற்றி, போலி பெயர்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட தன்பாலின பெண்களுக்கு விந்தணுக்களை தானம் செய்துள்ளார். சமீபத்தில் அவர்கள் அனைவரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவர்களின் குழந்தைகள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பதை கண்டு அப்பெண்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாறிவரும் காலநிலை, சூழலில் தற்போதைய தம்பதிகள் பலரிடம் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் குறைந்து வருகிறது. உணவு பழக்கங்களால் சிலருக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனும் இல்லாமல் போய்விடுகிறது.
அந்த வகையில் சில பெண்களின் ஆண் துணைக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலோ, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் கருத்தரிப்பு மையத்தை நாடி வருகின்றனர். அவர்கள் வேறொருவரிடம் இருந்து விந்தணுவை தானம் பெற்று அதன் மூலம் கருத்தரிக்க செய்து குழந்தையை பெற்றெடுக்கின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் வினோதமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு குழந்தையின்மை பிரச்னை அதிகமாக உள்ள நிலையில், ஆன்லைனில் விந்தணு தானம் குறித்த விளம்பரத்தை பார்த்து அதன்மூலமும் விந்தணு பெற்று கருத்தரிக்கும் நிகழ்வுகள் அதிகரிக்கின்றன. ஆஸ்திரேலியா சட்டப்படி மனித விந்தணுக்களுக்குப் பணம் செலுத்துவதும் பரிசுகளை வழங்குவதும் சட்டவிரோதமானது. இது தொடர்பான எந்த குற்றத்திற்கும் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். இந்த நிலையில் ஒருவர் போலி பெயர்களின் மூலமாக பதிவு செய்து தனது விந்தணுவை தானமாக அளித்துள்ளார்.
இது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தன்பாலின பெண்களுக்கு செலுத்தப்பட்டு அவர்களும் கருத்தரித்து குழந்தையும் பெற்றுள்ளனர். அடுத்த சில மாதங்களுக்கு பிறகு தன்பாலின பெண்கள் எல்லோரும் ஒன்றுக்கூடல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளனர். அப்போது சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்களின் குழந்தைகள் ஒரே ஜாடையில் இருப்பதை கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இதனையடுத்து அப்பெண்கள் கருத்தரிப்பு மையத்திற்கு சென்று விசாரிக்கையில் ஒரே நபர் ஆஸ்திரேலிய சட்டங்களை ஏமாற்றி பல பெயர்களில் பதிவு செய்து 60க்கும் மேற்பட்டவர்களுக்கு விந்தணு தானம் அளித்தது தெரியவந்தது. இதனால் அப்பெண்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement