திருமலை: தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துவந்தது. இதுதொடர்பாக, அதே மாவட்டத்தை சேர்ந்த காதர்(35) என்பவரை மேடக் டவுன் போலீசார் கடந்த ஜனவரி 29ம் தேதி விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். பிப்ரவரி 3ம் தேதி வரை காவல்நிலையத்தில் வைத்து காதரை அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதில் உடல்நலம் பாதித்த காதர், ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் 2 சிறுநீரகங்கள் பாதித்த நிலையில் கடந்த 18ம் தேதி இறந்தார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு காதரின் சடலம், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சடலத்தை, காதரின் மைத்துனர் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு சென்றார். சிறிதுதூரம் சென்றதும் மைத்துனரை, போலீசார் கீழே இறக்கி விட்டனர். மேலும், சடலத்தை வேறு ஆம்புலன்சுக்கு மாற்றி கொண்டு சென்றனர். சுமார் 1 மணிநேரம் தாமதமாக ஆம்புலன்ஸ் வீட்டிற்கு வந்தது. இதற்கிடையே வரும் வழியில் ஆம்புலன்சில் இருந்த சிகிச்சை தொடர்பான ஆவணங்களை போலீசார் எரித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காதரின் மனைவி சித்தேஸ்வரி கூறுகையில், ‘நானும் காதரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். காதர் கடுமையாக உழைத்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். செயின் பறிப்பு நடந்ததாக போலீசார் கூறும் அந்நாளில் நாங்கள் மேடக்கில் இல்லை. யாரோ சொன்னதால் காதரை போலீசார் அழைத்துச்சென்றனர்.
போலீசாரின் சித்ரவதையால்தான் உடல்நலம் பாதித்து இறந்தார். மருத்துவமனையில் இருந்து சடலத்தை கொண்டு வரும் வழியில் 3 ஆம்புலன்சுகளில் அவரது சடலம் மாற்றப்பட்டுள்ளது. மருத்துவமனை ஆவணங்கள் முழுவதையும் தீயில் எரித்துள்ளனர். இதற்கு, எஸ்ஐ ராஜசேகர் என்பவர்தான் காரணம்’ என குற்றம் சாட்டினார். இந்நிலையில் தெலங்கானா மாநில டிஜிபி அஞ்சனி குமார் உத்தரவின்பேரில் இந்த வழக்கு தொடர்பாக ஐஜி சந்திரசேகர் விசாரணை நடத்தினார். பின்னர் இதுதொடர்பாக மேடக் இன்ஸ்பெக்டர் மது, சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், கான்ஸ்டபிள்கள் பிரசாந்த் மற்றும் பவன்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து ஐஜி சந்திரசேகர் உத்தரவிட்டுள்ளார்.