“கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்…”
‘நேட்டோ’ படையில் இணையப்போவதாக உக்ரைன் அறிவித்து, மேலும் அதற்கான முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இதற்கு ரஷ்யா அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்து வந்தார். அப்போது அவர், “உக்ரைன் தனது முடிவை மாறிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்திருந்தார். ஆனால் அந்த நாடு தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதையடுத்து, உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு புதின் உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போர், தொடர்ந்து நடந்து வருகிறது. மறுபுறம் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு நாடுகள், உக்ரைனுக்கு உதவி செய்து வருகிறது. இதனால் இரண்டு தரப்பிலும் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில் உக்ரைனுக்கு 500 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஆயுதங்களை வழங்க அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. மறுபுறம் ரஷ்யாவுடன் சீனா கைகோர்த்திருக்கிறது.
“ஜோ பைடனின் சர்ப்ரைஸ் விசிட்”
ரஷ்யாவுக்கு தேவையான ஆயுத உதவிகளை சீனா விரைவில் வழங்கும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து வரும் காலங்களில் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் மேலும் உக்கிரமடையும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த 20-ம் தேதி ‘கீவ்’ நகருக்கு எவ்விதமான முன்னறிவிப்பின்றி பயணம் செய்தார். அப்போது அவர், “ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமான போரின் ஓராண்டு நிறைவுக்கு முன்னதாக உக்ரைனுக்கு வலுவான ஆதரவை அமெரிக்கா வழங்கும்” என, ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு உறுதியளித்தார். அப்போது ரஷ்யா ஏவுகணை அல்லது வான்வழித் தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை.
500 மில்லியன் டாலருக்கு உதவி:
இருந்தபோதிலும் தலைநகர் முழுவதும் சைரன்கள் ஒலித்தன. அப்போது பேசிய பைடன், “கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு புதின் தனது படையெடுப்பைத் தொடங்கியபோது, உக்ரைன் பலவீனமாக இருப்பதாகவும், மேற்கு நாடுகள் பிளவுபட்டிருப்பதாகவும் நினைத்தார். எங்களை மிஞ்சலாம் என்றும் நினைத்தார். ஆனால் அவர் தவறு செய்துவிட்டார். ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்ப்பதில் உக்ரைனியர்கள் துணிச்சலாக இருப்பது பாராட்டுதலுக்குறியது. உக்ரைனின் தியாகங்கள் மிகப் பெரியவை.
கடினமான நாள்கள், வாரங்கள் மற்றும் வருடங்கள் வரவிருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். எனவே பீரங்கி வெடிமருந்துகள், கவச எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் வான் பாதுகாப்பு ரேடார்கள் உட்பட மேலும் 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் வழங்கப்படும். ரஷ்யா மீது மேலும் கடுமையான தடைகள் விதிக்கப்படும்” என்றார். பின்னர் ஜெலன்ஸ்கி, “அமெரிக்க ஜனாதிபதி பைடனின் வருகை அனைத்து உக்ரேனியர்களுக்கும் ஆதரவளிப்பதற்கான மிக முக்கியமான அடையாளம்” என்றார்.
“மேற்குல நாடுகளின் பினாமி யுத்தம்…”
இதுகுறித்து ரஷ்யா நாட்டைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர்கள், “ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஒரு முக்கிய உரையை ஆற்றுவதற்கு ஒரு நாள் முன்னதாக, அமெரிக்கா அதிபரின் இந்த திடீர் வருகை நடந்திருக்கிறது. இது மேற்குல நாடுகளின் பினாமி யுத்தம். எனவே இரண்டாவது வருடத்திற்கான ரஷ்யாவின் நோக்கங்களை மாற்றி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் மூலோபாயப் போரில் அமெரிக்கா பந்தயம் கட்டியுள்ளது.
இந்தப் போரே ரஷ்யாவுக்கும், மேற்கு நாடுகளுக்கும் இடையேயான போராக மாற்ற முடியாத அளவிற்கு மாறியிருக்கிறது என்பதற்கு இது கூடுதல் சான்றாகக் கருதப்படும்” என்றனர். ஏற்கெனவே ரஷ்யாவுடனான மேற்கு நாடுகள் உறவுகளில் ஒரு வெளிப்படையான முறிவை இலக்காகக் கொண்டிருக்கிறது. தற்போது நிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரஷ்யா ஆயிரக்கணக்கான படைவீரர்கள் மற்றும் கூலிப்படையினரை கொண்டு குளிர்கால தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்கிறது.
“ரஷ்யாவுக்கு வரும் சீன வெளியுறவு மந்திரி…”
எனவே, இதை போரின் கொடிய கட்டத்திற்கான முக்கிய உந்துதலாக மேற்குலக நாடுகள் கருதுவது குறிப்பிடத்தக்கது. சமீப வாரங்களில் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தியதில் ரஷ்யா மிகக் குறைவான வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கிறது. இதற்கிடையில் ரஷ்யா தலைநகருக்கு சீன வெளியுறவு மந்திரி வாங் யி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ரஷ்யாவுடன் வரம்புகள் இல்லா நட்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், சீனா இதுவரை மோதலில் நடுநிலை வகிக்கிறது.
இருப்பினும் விரைவில் சீனா, ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கத் தொடங்கலாம் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. மேலும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், சீனாவின் உயர்மட்ட ராஜதந்திரி வாங் யீ மாஸ்கோவிற்கு வருகை தரவிருப்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் பயணத்திற்கான தேதி எதுவும் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக மேலும் அவர், “வாங் மற்றும் ஜனாதிபதி புதின் இடையேயான சந்திப்பை நாங்கள் நிராகரிக்கவில்லை. நிகழ்ச்சி நிரல் தெளிவானது மற்றும் மிகவும் விரிவானது. எனவே, பேசுவதற்கு நிறைய இருக்கிறது” என்றார்.
அமெரிக்காவுக்கு சவாலாக இருக்கும் சீனா, ரஷ்யா:
இதுதொடர்பாக சீன உயர்மட்ட அதிகாரி ஒருவர், “வாங் விரைவில் மாஸ்கோ செல்வார். உக்ரைன் மோதலுக்கு அரசியல் தீர்வு மற்றும் இருதரப்பு பிரச்சினைகளுக்கான சீன யோசனைகள் குறித்து விவாதிப்பார்” என்றும் கூறினார். சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை எதிர்த்து, புதினுக்கு ஆதரவாக நின்றார். உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு சீன – ரஷ்ய வர்த்தகம் உயர்ந்திருக்கிறது. மேலும் ரஷ்யா, சீனா உட்பட ஆசிய நாடுகளிடன் அதிக அளவு எண்ணெயை விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் பேசிய வாங், `உக்ரைன் நெருக்கடியின் அரசியல் தீர்வு குறித்த சீனாவின் நிலைப்பாட்டை முன்வைக்கும். சீனா அமைதி மற்றும் பாதுகாப்பின் பக்கம் இருக்கிறது’ என்றார். சீனாவையும் ரஷ்யாவையும் தனது பாதுகாப்பிற்கு இரண்டு பெரிய அச்சுறுத்தல்களாகக் அமெரிக்கா காட்டுகிறது. தொழில்நுட்பம் முதல் உளவு மற்றும் ராணுவ சக்தி வரை அனைத்திலும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சீனாவும், ரஷ்யாவும் சவால் விடும் வகையில் இருக்கிறது. உக்ரைனுக்கு எதிரான மாஸ்கோவின் நடவடிக்கையை சீனா கண்டிக்கவில்லை. மேலும் அதை ’படையெடுப்பு’ என்றும் அழைக்கவில்லை. மாறாக அதை ரஷ்யாவின் சொந்த பாதுகாப்பை பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட “சிறப்பு ராணுவ நடவடிக்கை” என்று விவரிக்கிறது.
“நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்…”
இதற்கிடையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், “உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு சீனா ஆதரவை வழங்கினால், பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்தார். இதுதொடர்பாக சீனா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், “சீன-ரஷ்யா உறவுகள் மீது அமெரிக்கா விரல் நீட்டுவதையோ அல்லது எங்களை வற்புறுத்துவதையோ நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
அமெரிக்கா சர்வதேச விதிமுறைகளை வெறித்தனமாக மீறி வருகிறது. ரஷ்யாவுடனான சீனாவின் விரிவான கூட்டுறவானது அணிசேராமை, மோதாமல் இருத்தல் மற்றும் மூன்றாம் தரப்பினரை இலக்காகக் கொள்ளாதது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது இரண்டு சுதந்திர நாடுகளின் இறையாண்மைக்கு உட்பட்டது. போரை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்று ஐரோப்பிய நாடுகள் அமைதியாக சிந்திக்க வேண்டும். ஆனால் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறுவதையோ அல்லது போர் விரைவில் முடிவுக்கு வருவதையோ விரும்பாத சில சக்திகள் இருக்கிறது” என்றார்.
ரஷ்யாவுக்கு இழப்பு:
இதற்கிடையில் உக்ரைனின் டான்பாஸ் சுரங்கம் மற்றும் தொழில்துறை பகுதியை உருவாக்கும் இரண்டு கிழக்கு மாகாணங்களின் முழுக் கட்டுப்பாட்டைப் பெற ரஷ்யா முயற்சித்து வருகிறது. இதற்காக வடக்கில் கிரெமின்னாவிலிருந்து தெற்கில் வுஹ்லேதார் வரை இயங்கும் இடங்களில் தாக்குதல்களைத் தொடங்கியிருக்கிறது. வரும் மாதங்களில் திட்டமிட்ட எதிர்த்தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்கும் உக்ரைன், மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களின் பெரும் வரவுகளை சேகரித்துக்கொண்டிருக்கிறது.
மேலும் சமீபகாலமாக முக்கியமாக போர்க்களத்தில் தற்காப்புப் பணியில் ஈடுபட்டு, தாக்குதல் நடத்தும் ரஷ்யப் படைகளுக்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாகவும் அந்த நாடு தெரிவித்திருக்கிறது. அந்த நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, “நாங்கள் படையெடுப்பாளர்களை உடைத்து, ரஷ்யாவிற்கு அசாதாரணமான குறிப்பிடத்தக்க இழப்புகளை ஏற்படுத்துகிறோம். டான்பாஸில், வுஹ்லேடர், மரிங்கா, கிரெமின்னாவில் ஆகிய பகுதிகளின் ரஷ்யா எவ்வளவு இழப்புகளை சந்திக்கிறதோ, அவ்வளவு விரைவாக, உக்ரைனின் வெற்றியுடன் இந்த போரை முடிக்க முடியும்” என்றார்.
அரசியல் அழுத்தத்தில் ரஷ்யப் படைகள்:
மேலும் இதுதொடர்பாக பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம், “இந்த போரினால் ரஷ்யா பெரும் உயிரிழப்புகளைச் சந்தித்து வருகிறது. இதில் இரண்டு உயரடுக்கு படையணிகள் உட்பட ஆயிரக்கணக்கான கடற்படையினர் உக்ரைனிய கோட்டையான வுஹ்லேடரைத் தாக்குவதற்கான முயற்சியில் தோல்வியுற்றிருக்கிறார்கள். எனவே இந்த போர் பயனற்றதாக இருக்கலாம். படையெடுப்பின் ஆண்டுவிழா நெருங்கி வருவதால் ரஷ்யப் படைகள் அரசியல் அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும். ரஷ்யா களத்தில் இருக்கும் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் பக்முட்டைக் கைப்பற்றியதாகக் கூறுகிறது.
மேலும் அந்த நாடு குளிர் கால தாக்குதலிலும் வெற்றி பெற தவறினால், ரஷ்யா தலைமைக்குள் பதட்டங்கள் அதிகரிக்கும்” என தெரிவித்திருக்கிறது. மேலும் மேற்கத்திய அரசுகள், “கிழக்கு மற்றும் தெற்கு முனைகளின் சந்திப்பில் உக்ரைனியப் படைகள் காத்துக்கொண்டிருக்கும் வுஹ்லேடார் மீதான ரஷ்ய தாக்குதல்கள் தோல்வியடைந்தது. கண்ணிவெடிகள் வைக்கப்பட்ட வயல்களில் அதைத் தாக்க முயன்ற ஆயிரக்கணக்கான வீரர்களையும், ஏராளமான கவச வாகனங்களையும் ரஷ்யா இழந்திருக்கிறது’ என்று தெரிவித்திருக்கிறது.
“திடீரென வெடி சத்தம்…”
தற்போதைய உக்ரைன் நிலவரம் குறித்து பெண் ஒருவர், “நாங்கள் வீட்டிற்குள் இருந்த போது திடீரென வெடி சத்தம் கேட்டது. அப்போது ஒரு குளிர்சாதனப்பெட்டி என் மேல் விழுந்ததால். அதனால் தான் பிழைத்தேன். பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கண்டுபிடித்து என்னை வெளியே இழுத்து வந்தனர். இங்கு இருப்பதற்கே பயமாக இருக்கிறது. கடந்த ஆண்டு பிப். 24-ம் தேதி முதல் நடந்து வரும் போர் இரு தரப்பிலும் சேதாரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக பல்லாயிரக்கணக்கான உக்ரைனிய குடிமக்கள் மற்றும் வீரர்களைக் கொன்றது, மில்லியன் கணக்கானவர்களை அவர்களின் வீடுகளில் இருந்து விரட்டியது மற்றும் நகரங்களை இடிபாடுகளாக்கியிருக்கிறது” என்றார். இதற்கிடையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, நூற்றுக்கணக்கான டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் உட்பட உக்ரைனுக்கு அதிக ராணுவ ஆதரவை மேற்கத்திய நாடுகள் வழங்குவதாக உறுதியளித்துள்ளன.
நீண்ட தூர ராக்கெட்டுகள் மற்றும் போர் விமானங்கள் உட்பட பலவற்றை உக்ரைன் விரும்புகிறது. மேற்கத்திய நாடுகள் ஜெட் விமானங்களை அனுப்பும் முடிவின் விளிம்பில் இருப்பதாக உக்ரைன் கூறி வருகிறது. இருப்பினும் இதற்கான முடிவு எப்போது அறிவிக்கப்படும் என்பதும், எத்தனை விமானங்கள் ஒப்படைக்கப்பட இருக்கிறது என்பதும், அவற்றில் என்ன வகையான ஆயுதங்கள் இருக்கும் என்பது முக்கியமான கேள்விகளாக இருக்கிறது.
இந்த நடவடிக்கைகளால் மோதல் மேலும் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.