2023-ம் ஆண்டிலும் வரதட்சணை கேட்கப்படுவதும் கொடுக்கப்படுதும் அவலம். பல காரணங்களுக்காக திருமணங்கள் நின்றுபோவது குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஹைதராபாத்தில் பழைய ஃபர்னிச்சர்களை வரதட்சணையாகக் கொடுத்ததாகக் கூறி, மணமகன் வீட்டினர் திருமணத்தன்று வராமல் போக, திருமணம் நின்றுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த திருமணமானது, பிப்ரவரி 19 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நாளில் மணமகன் திருமணத்திற்கு வரவில்லை. இதனால் விரக்தி அடைந்த மணமகள் வீட்டினர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து மணமகளின் தந்தை கூறுகையில், ’மணமகன் தரப்பில் கேட்ட பொருள்களை வரதட்சணையாகக் கொடுக்கவில்லை எனவும், ஃபர்னிச்சர் பழையதாக இருந்தது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
நான் திருமணத்திற்கான விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தேன். உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரையும் அழைத்தேன். ஆனால் மணமகன் திருமணத்திற்கு வரவில்லை’’ எனக் கூறியுள்ளார்.
காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், “மணமகனின் குடும்பத்தினர் வரதட்சணையாக மற்ற பொருட்களுடன், ஃபர்னிச்சர்களையும் கேட்டனர். ஆனால் பயன்படுத்திய ஃபர்னிச்சர்களை மணமகளின் குடும்பத்தினர் கொடுத்தனர் என்று சொல்லி, மணமகனின் குடும்பத்தினர் அதை நிராகரித்து, திருமண நாளில் வரவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனை சட்டம் மற்றும் வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என தெரிவித்துள்ளனர்.