மாஸ்கோ: ரஷ்யாவின் இருத்தலுக்காகவே உக்ரைனுடன் போர் நடத்திக் கொண்டிருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் ஓராண்டை நெருங்கும் நிலையில், அந்நாட்டின் உயர் பிரிவினருக்காக அதிபர் புதின் இன்று (செவ்வாய்க்கிழமை) உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: ”கடினமான, வேதனையான, அதேநேரத்தில் நமது நாடு மற்றும் மக்களின் எதிர்காலத்திற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் நாம் (ரஷ்யா) இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இந்த மோதல் (உக்ரைன் போர்) ஏற்பட்டுவிடக் கூடாது என நாம் மிகுந்த பொறுமையுடன் இருந்தோம். இதற்காக சாத்தியமான அனைத்தையும் செய்தோம். பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண முயன்றோம். அமைதியான முறையில் விட்டுக் கொடுத்துச் செல்வதற்கே முயன்றோம். ஆனால், நமது முதுகில் குத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டன. மேற்கத்திய நாடுகளின் ஆதரவில், கிரீமியா மீது தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டமிட்டது. இந்தப் போரை தொடக்கியவர்கள் அவர்கள்தான். உலகில் கட்டற்ற அதிகாரத்தை பெற அவர்கள் துடிக்கிறார்கள்.
நம்மைப் பொறுத்தவரை இது நமது இருத்தலுக்கான போர். நமது இருப்பு தற்போது ஆபத்திற்கு உள்ளாகி இருக்கிறது. உண்மையில் உள்ளூர் அளவிலான மோதல் இது. ஆனால், இதனை சர்வதேச அளவிலான மோதலாக அவர்கள் சித்தரிக்கிறார்கள். இதை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். அதற்கேற்ற வகையில் பதில் அளிக்கிறோம். ரஷ்யாவை தோற்கடித்துவிட முடியும் என்று தப்புக் கணக்கு போட்டு இந்த மோதலை அவர்கள் தொடங்கிவிட்டார்கள். ரஷ்யாவை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது.
மேற்கத்திய நாடுகள் உக்ரைனின் அரசியல், ராணுவ, பொருளாதார கட்டமைப்புகளை ஆக்கிரமித்துவிட்டார்கள். இந்த மோதலில் நாம் முன்னேறி வருகிறோம். உக்ரைனின் 5-ல் ஒரு நிலப்பகுதி நமது கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளது. ஆனால், ரஷ்யாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கவும், அதன் இயற்கை வளங்களை திருடவும் மேற்கத்திய நாடுகள் முயல்கின்றன. நேட்டோவை கிழக்கை நோக்கி விரிவுபடுத்துவதற்கான காரணம் ஏதுமில்லை. ஆனாலும், அதற்கான முயற்சியில் ஈடுபட்டு தற்போது தோல்வியைத் தழுவ இருக்கிறார்கள்” என்றார் புதின்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்று, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரூ.4,135 கோடி மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அவர் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது. அதன் முழு விவரம்: உக்ரைன் அதிபருடன் ஜோ பைடன் திடீர் சந்திப்பு – ரூ.4,135 கோடி மதிப்பு ஆயுதங்கள் வழங்குவதாக உறுதி