டெல்லி: சிரியா, துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பல லட்சம் பேர் உடமைகளையும் வீடுகளையும் இழந்துள்ளனர். அங்கு 20 நாட்களுக்கும் மேலாக மீட்புக்கணி நீடித்தது. இந்நிலையில், துருக்கி, சிரியாவை தொடர்ந்து உலகின் பல நாடுகளிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இன்று காலை முதலே இந்தியாவில் பல பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகி வருகின்றன. அதன்படி உத்தரகாண்ட், டெல்லி, நேபாளம் உள்பட பல இடங்களில் நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சென்னையில் நில அதிர்வு காரணமாக அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் வெளியேறினர். அண்ணாசாலை அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் யூனியன் வங்கி மற்றும் 2 கட்டடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர். மெட்ரோ ரயில் பணியினால் கட்டடத்தில் அதிர்வு ஏற்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் இன்று பகல் 1.30 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது. தலைநகர் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதால் கட்டடங்கள் குலுங்கின. அதிர்வை உணர்ந்த மக்கள், வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்து வெளியேறினர். உத்தராகண்ட் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. நேபாளத்தின் பஜூரா என்ற இடத்தை மையமாக இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் உள்ள ஜும்லாவில் இருந்து 69 கிமீ தொலைவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிமீ ஆழத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது. மக்கள் பாதுகாப்பு கருதி சாலையில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. முன்னதாக ஜனவரி 24ம் தேதி நேபாளத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இருந்து கிழக்கு திசையில்143 கி.மீ. தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வுக்கான தேசியமையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மொனராகலை மாவட்டத்தில் புத்தலம் பகுதியில் பகல் 11.44 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புத்தலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 3.2 புள்ளிகளாக பதிவானது. புத்தலம் பகுதியில் ஏற்கனவே பிப்ரவரி 11ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.