வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
சீனி தன் காதல் மனைவி தீபாவுடன் இப்போது தன் சொந்த ஊருக்கு காரில் துக்கவீட்டிற்கு சென்றுகொண்டிருக்கிறான். துக்கவீடு யாரோ ஒருவரின் வீடல்ல. அது அவன் வீடுதான்! சிமெண்ட் தரையிலும் டைல்ஸ் தரையிலும் உருண்டு பிரண்டு அவன் வாழ்ந்த வீடுதான்! இறந்துகிடப்பவர் அவன் அப்பா நல்லுசாமி. அவர் இறந்துபோய் இரண்டு நாட்களுக்கு மேலாகிறது. அக்கம் பக்கத்தினர் உறவினர் எல்லாரும் சீனிக்கு போன்மேல் போன் அடித்தனர்.
“அப்டியா… சரி இப்ப அதுக்கு என்ன…” என்று அலட்சியம் செய்தான். தீபாவால் அவனைப்போல் இருக்க முடியவில்லை. இப்போது அவனை வலுக்கட்டாயமாக துக்கவீட்டிற்கு அழைத்துச்செல்வது அவள் தான்.
சீனியின் தங்கையும் அம்மாவும் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்கும் போது மணல் லாரியில் அடிபட்டு இருவரும் ஒன்றாக விண்ணுலகம் சேர்ந்தனர். அவர்கள் இறந்தபோது வரட்டு கத்து கத்தி கண்விழி பிதுங்க அழுதான் சீனி. தீபா அவனை மார்போடு அணைத்து ஆறுதல்படுத்தினாள். ஆனால் அவன் அப்பா அப்படியெல்லாம் அழவில்லை. அவருக்கு சோகத்தைவிட கோபம் தான் அதிகம். தீபா மீது! எலவுக்கு வந்த உறவினர்களில் எதோ ஒரு நாரவாய், “உம்மகன் இந்த பிள்ளைய இழுத்துட்டு வந்த நேரம் ரெண்டு உசிரு அநியாயமா போயிடுச்சு… கண்டகண்ட சாதிலிருந்து இழுத்துட்டு வந்தா இப்படித்தான்…” என்று பற்றி வைக்க, சீனியின் அப்பாவின் நெஞ்சுக்குள் கோபக்கனல் தகதகவென்று எரிந்தது.
அதை உணர்ந்த தீபா, அடுத்தடுத்த நாட்களில் அவரிடம் அன்பாகவும் மரியாதையாகவும் பேசி கோபத்தை தணிக்க முயன்றாள். ஆனால் அவர், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றே இருந்தார். வேண்டுமென்றே ஒரு வேலைக்காரம்மாவை நியமித்தார். தீபா சமைத்ததை உண்ணாமல் தவிர்த்து அவளுடைய மனம் புண்படும்படி நடந்துகொண்டார். சீனியும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தான், அவர் கேட்கவே இல்லை.
திடீரென ஒருநாள் நள்ளிரவில் எழுந்து,
“நாம பிரிஞ்சிருந்தா கூட இந்தளவுக்கு கஷ்டப் பட்ருக்கமாட்டேன் சீனி… என்னால தான உன் அம்மாவும் தங்கச்சியும் செத்து போனாங்க… நான் வந்த நேரமே சரியில்ல… ஒரு குழந்தைய பெத்து கொடுத்தா உங்கப்பா கோபம் குறையும்னு நினைச்சு நம்மளும் ஏழு வருசமா முயற்சி பண்றோம்… இந்த பாழா போன வயித்துல ஒரு புழுபூச்சிகூட அண்டல…” என்று அழுது புலம்பினாள் தீபா.
அவள் அப்படி அழுது புலம்பிய அடுத்த நாள் சீனியின் அப்பா பணியாற்றிய அரசுப்பள்ளியில் அவருக்கு ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். பள்ளி தலைமையாசிரிராக பணியாற்றியவருக்கு அன்று இறுதி பணிநாள். ரிட்டையர் ஆகும் அவரை சிறப்பிக்கும் விழா அது. அத்தனையும் அங்கு படித்த ஏழை மாணவர்கள் தங்கள் சொந்தக்காசில் ஏற்பாடு செய்தது. உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒருவரும் சல்லி பைசா தரவில்லை. பூங்கொத்தோடு நிறுத்திக்கொண்டார்கள். குடும்ப உறுப்பினர்கள் என்கிற முறையில் சீனியும் தீபாவும் அங்கு சென்றிருந்தார்கள். ஒன்றிரண்டு மாணவர்களைத் தவிர வேறு ஆசிரியர்கள் யாரும் அவ்வளவாக அவர்களை கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால் சீனியுடன் இருப்பவள் தீபா என்பதால்!
அப்போது தன் அப்பாவை பக்கத்து ஊர் அரசுபள்ளி தலைமையாசிரியர் மேடையில் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசியதில் முக்கால்வாசி அண்டப்புழுகல்! அப்போது நல்லுசாமியின் முகத்தை பார்க்கணுமே! தன்னை தகுதிக்கு மீறி புகழ்கிறார்கள் அவர்கள் பேசுவது பொய் என்று தெரிந்திருந்தும் பெருமிதமாக புன்னகைத்தார்.
சீனியால் அதற்குமேலும் அங்கு அமர்ந்திருக்க முடியவில்லை. ஒவ்வொரு ஆசிரியராய் மேடையேறி தன் அப்பாவை புகழ்வதை கேட்கும்போது, அவனுக்கு தன் காதிற்குள் கட்டெறும்பு புகுந்து விட்டுவிட்டு கடிப்பது போலிருந்தது. ஆர்வமாக விழாவை பார்த்துக் கொண்டிருந்த தீபாவை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்துச்சென்றான்.
அடுத்தநாள் அவனும் தீபாவும் உதவிப்பேராசிரியராக பணியாற்றிய பொறியியல் கல்லூரிக்கு வழக்கம்போல சென்றார்கள். ஏற்கெனவே பாரமாக இருந்த அவர்கள் தலையில் இன்னொரு பெரிய பாரத்தை கல்லூரி நிர்வாகம் எடுத்து வைத்தது. அடுத்த கல்வியாண்டிற்கு ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தது முப்பது மாணவர்களையாவது இன்ஜினியரிங்கில் சேர்த்து விடனுமாம். அப்படி செய்தால்தான் வேலையில் தொடரமுடியுமாம். பெரும்பாலான கல்லூரிகளில் இந்தக்கொடுமை நிலவி வருகிறது. சீனி இந்தக் கொடுமை தாங்க முடியாமல் கல்லூரியை விட்டு வெளியேற முடிவெடுத்தான்.
“நாம இங்க ஜாயிண்ட் பண்ணி ஏழு வருசமா வொர்க் பண்றோம்… வருசவருசம் செய்றதுதான… கொஞ்சம் அவசரப்படுறியோனு தோணுது… ” என்று தீபா பொறுமையாக எடுத்துரைத்தாள்.
“உனக்கு புரியலயா தீபா… நாம செய்றது புனிதமான டீச்சர் வேலை… எங்கப்பா இவ்வளவு வருசமா கவர்மெண்ட் ஸ்கூல்ல பசங்களுக்கு நேர்மையா எதுவும் சொல்லித்தராம ஓப்பி அடிச்சு சம்பாதிச்சாப்ல… நாம இந்த ஏழு வருசம் விதியேன்னு கூட்டத்தோட கூட்டமா வாழ்ந்து தொலைஞ்சோம்… ஸ்டூடன்ஸ் லைஃப்ப ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டதால தான் நமக்கு இன்னும் கிடைக்க வேண்டியது கிடைக்கலனு தோணுது… அம்மாவையும் தங்கச்சியையும் அவங்களோட சாபம் தான் பழிவாங்குச்சுனு தோணுது… சம்பளம் கம்மியா இருந்தாலும் பரவால எங்க நம்ம மனசாட்சிக்கு விரோதம் இல்லாம இந்த டீச்சர் வேலைய செய்ய முடியுதோ அங்கயே செஞ்சுக்கலாம்… ” என்ற சீனியின் அறிவுரையை சில நிமிட யோசனைக்குப்பின் ஏற்றுக்கொண்டாள் தீபா.
இருவரும் வேலையை விட்டெறிந்த கவலையை போக்க ஏதேதோ சினிமா கதைகள் பேசியபடி வீட்டிற்குள் நுழைந்தார்கள். மிகுந்த மகிழ்ச்சியுடன் நடுவீட்டில் சேர் போட்டு டிவியில் சிரிப்பே வராத சில காமெடிகளைப் பார்த்து சிரித்தபடி அமர்ந்திருந்தார் அப்பா நல்லுசாமி. அவர்களுக்கு வேலை பறிபோன செய்தியை எதோ ஒரு பட்சி அவர்களுக்கு முன்பு அவர் காதில் போட்டுவிட்டது. அவரை கண்டுங்காணாமல் செல்வதுபோல் சீனியும் தீபாவும் தங்கள் அறைக்கு நடக்க முற்பட,
நல்லுசாமி “வேலை காலியாம்…” என்றார் செம நக்கலாக. அவர் கேட்ட விதம் சீனிக்கு மிகுந்த எரிச்சலை தந்தது. இருந்தாலும் மௌனம் கடைபிடித்தான்.
“சனியன கூடவே கூட்டிக்கிட்டு சுத்துனா இப்புடித்தான்… ம்ஹும்… நாம சொன்னா யாரு கேட்குறா…” என்றார் மீண்டும் அதே நக்கல் மாறாத தொனியில். இந்தமுறை சீனி மௌனத்தை கடைபிடிக்கவில்லை. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அப்பாவின் இடது கன்னத்தில் ஓங்கி ஓன்று விட்டான். அந்த அடியை சற்றும் எதிர்பாராத அந்த முதிர்ந்த கண்கள் மிரண்டு போனது.
வெகுண்டெழுந்தார்.
சுவர் பக்கம் திரும்பி நின்று,
“எனக்கு இனி யாரும் கிடையாது… எந்த ஒட்டுறவும் கிடையாது… இதுக்கு மேலயும் யாராச்சும் இந்த வீட்டுல இருந்தா மானங்கெட்டு போய்டுவிங்க…” என்றார்.
அவருடைய பார்வை சுவர் பக்கத்திலிருந்து வீட்டின் எல்லா பக்கங்களிலும் திரும்பியபோது சீனியும் தீபாவும் அங்கு இல்லை. வேறொரு ஊரில் அதாவது இப்போது குடியிருக்கும் ஊருக்கு வந்துவிட்டார்கள். இருவருக்கும் ஏழாண்டுகள் முன் அனுபவம் இருந்ததால் மூன்றே வாரங்களில் நல்ல கல்லூரியில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தது. புது வேலை கிடைத்த இடத்தில் தப்பித்தவறிகூட அப்பா நல்லுசாமி போல் இருந்திடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். அந்தளவுக்கு பொறுப்பற்ற ஆசிரியர் அந்த நல்லுசாமி.
அரசுப்பள்ளியில் நோகாமல் உக்காந்து எழுந்து வரும் நல்லுசாமி, சீனியையுயும் அவன் தங்கையையும் உஷாராக தனியார் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் விடுதியில் தங்க வைத்து படிக்க வைத்தார். அப்போதெல்லாம் அதை சீனி பெரும் கௌரவமாக எண்ணினான். அதனாலயே அன்றெல்லாம் தன் அப்பாவிற்கு அவன் செல்லப்பிள்ளையாக திகழ்ந்தான். விடுதி மாணவர்களுக்கு பண்டிகை நாட்களில் ஒன்றிரண்டு நாட்கள் விடுமுறை சேர்த்துவிடப்படும்.
அப்போதெல்லாம் அப்பா பணியாற்றிய அரசுப்பள்ளிக்கு டிப்டாப் உடையணிந்து அவருடன் செல்வான் சீனி. எல்லா மாணவர்களும் அவனை அதிசயித்து பார்ப்பார்கள். மற்ற ஆசிரியை ஆசிரியர்கள் அனைவரும் அவனை கொஞ்சி தள்ளுவார்கள். அப்போது தன்னை ஹீரோவாக நினைத்துக்கொள்வான் சீனி. அன்றைய நாட்களில் தன் அப்பா பாடம் நடத்தி அவன் பார்த்ததே இல்லை. எப்போதாவது எதோ ஒரு மாணவனை எழுப்பி புத்தகத்தில் இருப்பதை அப்படியே வாசிக்கச்சொல்வார். அவ்வளவு தான் அவர் பாடம் நடத்தும் லட்சணம்.
“அப்பா உனக்கு பாடமே நடத்த தெரியல… எங்க ஸ்கூல்ல எப்படி நடத்துவாங்க தெரியுமா…” என்று மற்ற ஆசிரியர்கள் முன் விளையாட்டாகவும் கேட்டேவிட்டான் சீனி.
அதையெல்லாம் அவர் கண்டுகொண்டதாக தெரியவில்லை. தேர்வு விடைத்தாள் கொடுக்கும்போது குறைவான மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களை அடித்துவரும்படி குச்சியை தூக்கி அவன் கையில் கொடுப்பார். ஆர்வமாக வாங்கிச்சென்று “சாவுங்கடா” என்று சொல்லி சக்கையாகும் வரை சகட்டுமேனிக்கு அவர்களை அடிப்பான் சீனி.
“அய்யோ… அம்மா… வலிக்குதுங்கண்ணா…” என்று அவர்கள் கதறி அழுவார்கள். அனைவரும் அவனைவிட ஒன்றிரண்டு வயது மூத்தவர்கள். அவர்கள் தன்னை “அண்ணா” என்றழைக்கும்போதெல்லாம், மற்ற சிறுவர்கள் தன்னை பார்த்து பயப்படும்போதெல்லாம் அவன் “நாம தான் எல்லாம்” என்றுணர்வான்.
அப்பாவும் சீனியும் மற்ற ஆசிரியர்களும் ஒன்றாக அமர்ந்து மதிய வேளையில் உணவு உண்பார்கள். சத்துணவு பொருட்களில் அவனுக்கென்று தனியாக சமைக்கப்பட்ட ருசியான முட்டைப்பொறியல் அவனை தேடி வரும். மற்ற மாணவர்கள் அவன் வாயை பார்க்க, அவர்களிடம் கேலிப்புன்னகையை வீசி தின்றுமுடிப்பான். அன்று அப்படித்தான், தின்றுமுடித்த சில மணி நேரங்களிலயே அப்பாவிடம் போய், “அப்பா… டாய்லெட் போகணும்…” என்றான். அவர் உடனே தன் பள்ளியில் படிக்கும் சீனியைவிட ஒரு வயது மூத்த மாணவனான கூலித்தொழிலாளி காளிமுத்து மகன் குமரேசனை அழைத்தார். அவர் எதற்காக அழைத்தார் என்று அப்போது சீனிக்கும் புரியவில்லை. குமரேசனுக்கும் புரியவில்லை.
அருகில் வந்த குமரேசன் கையை கட்டிக்கொண்டு “சார்” என்று பம்மியபடி நின்றார்.
“நீ என்ன பண்றினா… நம்ம ஸ்கூல் பாத்ரூம்ல கடைசி டாய்லெட் இருக்குல்ல… அதான் சாருங்க மட்டும் போற கக்கூஸ் இருக்குல்ல… அத போயி மருந்து தண்ணி ஊத்தி நல்லா கழுவிவுட்டுட்டு வா… சுத்தமா இருக்கணும் சரியா…” என்று வேலை வாங்கும் பொருட்டு சிரித்துக்கொண்டே பேசி, மெல்லிதாய் அவர் தோளில் தட்டியனுப்பினார். குமரேசனும் அப்போது ஒன்றுமறியா அப்பாவியாய், சார் என்கிட்ட சிரித்து பேசினாரே என்று உற்சாகப்பட்டு சொன்ன வேலையை துல்லியமாக செய்துமுடித்துவிட்டு,
“சார்… சுத்தமா கிளீன் பண்ணிட்டேன் சார்… துளி அழுக்கு இல்ல… டாய்லெட் வாசமா இருக்கு சார்…” என்றார்.
“வெரிகுட்… நல்ல பையன்… இப்படித்தான் சொன்ன வேலைய சரியா செய்யணும்…” என்று அவர் சொல்ல, “சரிங்க சார்” என்று தலையாட்டிக்கொண்டு அவருடைய இடத்தில் சென்று அமர்ந்தார் குமரேசன். அப்போது சீனிக்கு, குமரேசன் என்பவன் தனக்கு தொண்டு செய்யும் அடிமை பணியாள் என்பதாக தெரிந்தார்.
விடுமுறை முடிந்து மீண்டும் தனியார் பள்ளி விடுதிக்கு திரும்பும்போது தன்னுடன் படிக்கும் பணக்கார நண்பர்களிடம் அப்பாவின் ஸ்கூல் எவ்வளவு காமெடியாக இருக்கிறது என்பதை சொல்லி சிரித்து மகிழ்வான் சீனி.
அதே தனியார் பள்ளியில் பண்ணிரண்டாம் வகுப்பு வரை தொடர்ந்தான்.
“நீ எப்படியாவது கஷ்டப்பட்டு படிச்சு டாக்டராகணும்” என்று அவன் அப்பா கட்டளையிட்டிருந்தார். டாக்டராக வேண்டுமென்றால் நல்ல கட்ஆப் எடுக்கவேண்டும். அதனால், அதற்கான பாடங்களில் மட்டும் மற்ற மாணவர்களை போலவே அவனும் கவனம் செலுத்தினான். வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே தமிழ்ப்பாடவேளை. ஆங்கில வழிக்கல்வியில் படித்த அவர்களுக்கு தமிழ்ப்பாடம் என்றாலே எரிச்சலாகும். அதிலும் பண்ணிரண்டாம் வகுப்பிற்கு குறிப்பாக டாக்டராக வேண்டுமென்ற மாணவர்களுக்கு எதற்கு தமிழ்ப்பாடத்தை வெட்டியாக நடத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்று புலம்பித்தள்ளினார்கள்.
அவர்களுக்கு வந்த தமிழாசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஐயா மிக நேர்மையானவர். செய்யும் தொழிலே தெய்வமென்று ஆசிரியப்பணியை மிகவும் நேசித்து செய்பவர். அதனாலயே அவர் மற்ற ஆசிரியர்களிடமிருந்து புறக்கணிக்கப்பட்டிருந்தார். பெரும்பாலும் தனியாகவே சுற்றுவார். அவரை மற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து ஓட்டித்தள்ளுவார்கள். அதையெல்லாம் அவர் காதில் போட்டுக்கொண்டதில்லை. ஒருநாளும் விடுப்பு எடுத்ததில்லை. வகுப்பிற்கு தாமதமாக வந்ததாக சரித்திரமே இல்லை.
ஒருநாள் காலையில் சீனி வகுப்பிற்கு முதல்பாடவேளையாக தமிழ்பாடம். கரும்பலகையில் இலக்கணக்குறிப்பு எழுதிக்கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி ஐயாவை பற்றி சீனியும் அப்போது அவன் அருகில் அமர்ந்திருந்த பணக்கார நண்பன் பிரனேசும்,
அவரை உருவ கேலி செய்து பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களது சிரிப்பு சத்தம் கேட்டு திரும்பியவர், அவர்களைப் பார்த்து “அங்க என்ன சிரிப்பு” என்றார் சற்று மிரட்டும் தொனியில். அவருடைய வேலைக்கு தொந்தரவாக இருந்ததால் அந்த தொனி. சீனி உடனே சிரிப்பை அடக்கிக்கொண்டு முகத்தை இயல்பாக வைத்திருக்க, பிரனேஷ் அவரைப்பார்த்து முறைத்தான்.
“மூடிட்டு திரும்புடா” என்று முனகினான்.
அவன் முனகலைப் பார்த்தவர்,
“என்னடா எதோ வாய்க்குள்ள முனகுற… அவ்வளவு ஆயிடுச்சா… ” என்க,
“ஆமாடா… ஆமா… வா… வந்து…” என்று எழுந்துநின்று கத்தினான். மற்ற மாணவர்கள் எல்லோரும் அவரின் மோசமான நிலையைக்கண்டு எள்ளி நகைத்தனர். சீனியும்தான். எப்போதும் அமைதியாக இருக்கும் கிருஷ்ணமூர்த்தி ஐயாவுக்கு அந்த ஏளனச்சிரிப்பு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. பிரனேசை நோக்கி வேகமாக வந்தவர், அவனது கன்னத்தில் பளார் பளாரென்று இரண்டு விட்டார்.
“டேய்… கைய எடுறா… எதுக்குடா என்னைய அடிச்ச…” என்று அவன் எதிர்த்து நிற்க, அவர் மேலும் கோபமானார். புறமண்டையில் நாலுதட்டு தட்டி காலரை பிடித்து வகுப்பிற்கு வெளியே இழுத்துச்சென்றார். அருகிலிருந்த சீனிக்கு கால்கள் நடுங்கியது. சிறுநீர் முட்டிக்கொண்டு நின்றது.
அடிவாங்கியதை மதிய உணவு இடைவேளையில் வேறொரு ஆசிரியரின் செல்போன் மூலமாக பிரனேஷ் தன் வீட்டிற்கு தெரிவிக்க, அன்று மாலையே பிரனேசின் அப்பாவும் அவருடைய உறவினர்களும் சேர்ந்துகொண்டு பள்ளிக்குள் புகுந்து கிருஷ்ணமூர்த்தி ஐயாவை இருட்டறைக்குள் தூக்கிச்சென்று ஒரு கொலைக்குற்றவாளியை தண்டிப்பது போல சகட்டுமேனிக்கு அடித்து துன்புறுத்தினர். அவர் அடிவாங்கும் செய்திகேட்டு பிரனேசும் மற்ற மாணவர்களும் மகிழ்ந்தார்கள். சீனிக்கு முதல்முறையாக லேசாக உறுத்தியது. தவறாகப்பட்டது. அடிவாங்கி எழுந்து நிற்க முடியாமல் சுருண்டு கிடந்த தமிழாசிரியரை தமிழ்மீடியத்திற்கு செல்லும் ஆசிரியர்களும் தமிழ்மீடிய மாணவர்களும் அக்கறையாக தூக்கி நிற்க வைத்து உடையை அணிவித்து வீடுவரை உடன்சென்று அனுப்பிவிட்டு ஆறுதல் சொல்லி வந்தனர்.
அந்த ஆசிரியருக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் சீனியும் பிரனேசும் அவர்களது வகுப்பறையின் இதர மாணவர்களும் இருந்தார்கள். பள்ளி நிர்வாகமும் அதே மாதிரிதான் இருந்தது.
அடுத்தநாள் காலை ஒரு அதிர்ச்சி செய்தி அவர்கள் காதை வந்தடைந்தது. கிருஷ்ணமூர்த்தி ஐயா தற்கொலை செய்துகொண்டார் என்று. கடன் பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டார் என்று பள்ளி நிர்வாகம் அதை திசைதிருப்பியது.
சீனியின் வகுப்பு மாணவர்கள் அனைவரும், “அந்தாளு ஒரு சைக்கோ… அவன் தூக்கு மாட்டிக்கிட்டு செத்ததுக்கு நாம என்ன பண்ண முடியும்…” என்று பேசிக்கொண்டனர். சீனிக்கு உறுத்தல் அதிகமானது. அவர்களைப்போல அவனால் எளிதாக பழித்துப் பேச இயலவில்லை.
அப்போதுதான் வேலையே செய்யாமல், நோகாமல் சம்பளம் வாங்கும் தன் அப்பாவை உலகம் கொண்டாடியதற்கான காரணமும், நேர்மையாக தன் பணியை செய்த கிருஷ்ணமூர்த்தி ஐயாவை இந்த உலகம் தூக்கி வீசியதற்கான காரணமும் கொஞ்சம் கொஞ்சமாக சீனிக்கு புரியத்தொடங்கியது. எவ்வளவு கேவலமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தான். கிருஷ்ணமூர்த்தி ஐயாவை புதைக்கும்போது அவர் நெஞ்சின் மீது சில தமிழ் புத்தகங்கள் வைத்து புதைத்ததாக செய்தி கேள்விப்பட்டான் சீனி. அவனுக்கு அதற்குமேல் படிப்பில் நாட்டமில்லாமல் போனது. உண்மையில் அவனுக்கு மருத்துவபடிப்பில் ஆர்வமில்லை. வெறும் கௌரவத்திற்காக படித்து என்ன பிரயோஜனம். மதிப்பெண் குறைந்தது.
அப்பா கண்டபடி திட்டினார். இரண்டு நாட்களுக்கு அவர் சீனியிடம் பேசவே இல்லை. அதற்கு முந்தைய ஆண்டு, அவரிடம் படித்த காளிமுத்து மகன் குமரேசன் அரசுபள்ளியில் படித்துக்கொண்டே மாலை வேளைகளில் நல்ல ஆசிரியரிடம் டியூசன் சென்று நல்ல மதிப்பெண் பெற்று டாக்டர் சீட் வாங்கினார். அவருடைய வெற்றிக்கு நான் தான் காரணம் என்றும் நான் கொடுத்த பயிற்சி அப்படியென்றும் பத்திரிக்கைகளில் அல்பத்தனமாக பேட்டியளித்தார் நல்லுசாமி!
“எவனோ கூலிக்காரன் பையன்லாம் படிச்சு டாக்டராகுறான் உனக்கு என்ன கேடு!” என்று சீனியை சாடினார். அப்போதுதான் அவர் சீனிக்கு முதல்முறை வில்லன் ஆனார்.
“என்ன பண்றது… பெத்த கடனுக்கு செஞ்சு தொலையணும்…” என்று அவன் விரும்பிய கல்லூரியில் சேர்த்துவிடாமல் அவருடைய நண்பர்கள் பணியாற்றிய தனியார் பொறியியல் கல்லூரியொன்றில் சேர்த்துவிட்டார். அப்போது அவர் சீனிக்கு இரண்டாவது முறை வில்லன் ஆனார்.
கல்லூரி இறுதியாண்டில் இன்னும் கொஞ்சம் விவரம் புரிந்தது. அக்காலங்களில் தமிழ்மீடியம் மாணவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. கல்லூரி தொடக்கத்தில் அவர்கள் ஆங்கிலம் தெரியாமல் தடுமாறினாலும் இறுதியாண்டு வரை முயன்று நல்ல மதிப்பெண்களோடு வெளியேறினார்கள். அது அவர்களுடைய கட்டாயமாகவும் இருந்தது. சீனி வேறுவழியின்றி எம்இக்கு அப்ளை செய்தான். எம்இ முடித்த கல்லூரியிலயே பணியும் கிடைத்தது. உடன் பணியாற்றிய தீபாவை காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டிற்கு போனபோது நல்லுசாமி சீனிக்கு மூன்றாவது முறையாக வில்லன் ஆனார்.
இப்போது சொந்த ஊரை வந்தடைந்துவிட்ட சீனியும் தீபாவும் காரை வீட்டுமுன் நிறுத்திவிட்டு உள்ளே செல்ல, போன் பேசிய உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் யாரும் அங்கு இல்லை. ஒரேயொரு நாள் மட்டும் பெயருக்கு இருந்துவிட்டு எல்லோரும் பொழப்பை பார்க்க ஓடிவிட்டனர். அப்பாவை கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பாதுகாத்துக் கொண்டிருந்தவர்கள்… அவரிடம் படித்துவிட்டு கட்டட வேலைக்கும், டிரைவர் வேலைக்கும், சித்தாள் வேலைக்கும், டெய்லர் வேலைக்கும், நூறுநாள் வேலைக்கும் சென்றுகொண்டிருக்கும் அவருடைய அப்பாவி மாணவ மாணவிகள். அதில் ஒன்றிரண்டு பேர் சிறுவயதில் சீனியிடம் அடிவாங்கியவர்கள். அவர்கள் முகத்தை பார்க்க முதலில் சீனிக்கு கூச்சமாக இருந்தது. அவனது உடல் நடுங்க ஆரம்பித்தது. ஆனால் அந்த முன்னாள் மாணவர்களோ சகஜமாகப் பேச, சீனி கொஞ்சம் கொஞ்சமாக இயல்பானான்.
கேட்டிற்கு வெளியே வந்து நின்ற மருத்துவர் குமரேசனை பல வருடங்கள் கழித்து பார்த்த வியப்பில் “அண்ணா” என்றழைத்து உள்ளே வரச்சொல்லி சீனி அழைத்தபோது குமரேசனுக்கு உள்ளே வருவதற்கு தயக்கம். வாசலுக்கு வேகமாகச் சென்று அவரது கையை பிடித்து உள்ளே இழுத்து வந்தான் சீனி. குமரேசனும் இதர மாணவர்களும் இறுதிசடங்கு காரியங்களை செய்ய தொடங்க அடுத்த சில மணி நேரங்களில் நல்லுசாமியின் உடல் மயானத்தை அடைந்தது.
வீடு சுத்தமாக்கப்பட்டது.
எல்லாம் முடிந்து நல்லுசாமியின் முன்னாள் மாணவர்கள் எல்லோரும் கலைந்து செல்ல, இதுவரை இருந்தது போல் இல்லாமல், நேர்மையான ஆசிரியராக தன் புதிய பயணத்தை தொடங்க இருப்பதை பற்றி குமரேசனிடம் சீனி மனம்விட்டு பேசினான். அதை கேட்ட குமரேசன், தன் ஹேண்ட் பேக்கிலிருந்து தான் எழுதிய “தீண்டாமை” எனும் புத்தகத்தை எடுத்தார்.
அந்தப் புத்தகத்தில், எந்தக் கைகளால் சீனிக்காக பள்ளி கழிவறையை சுத்தம் செய்தாரோ அதே கைகளால் தன் பச்சை இங்க் பேனாவால்,
“அன்புத்தம்பி சீனி! உங்கள் சிறகுகள் மேலும் வலிமையாகட்டும்!”
என்றெழுதி பச்சை இங்க்கில் தன் கையெழுத்திட்டு அந்தப் புத்தகத்தை சீனியிடம் பரிசாக கொடுத்தார் குமரேசன்!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.