மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செண்பகசாமி, அண்ணாதுரை. இவர்கள் இருவரும் பழையாறு கிராமத்தில் அரசு சார்பில் வழங்கப்பட்ட நிலத்திற்கு போலி பட்டா தயார் செய்து வீடு கட்டி தருவதாக சுமார் 25-க்கும் மேற்பட்டோரிடம் பணம் வாங்கியுள்ளனர்.
ஆனால், அவர்கள் இருவரும் சொன்னதுபடி மக்களுக்கு வீடுகட்டித் தரவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் பழையாறு ஊர் பஞ்சாயத்தாரிடம் நடந்தவற்றைத் தெரிவித்தனர். அதன் பின்னர் பஞ்சாயத்தார் விசாரணைக்கு வருமாறு செண்பகசாமி மற்றும் அண்ணாதுரையை அழைத்துள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் வரவில்லை.
அதனால், இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் அவர்கள் தெரிவித்து இருப்பதாவது:- “செண்பகசாமி நாம் தமிழர் கட்சியில் ஊழல் தடுப்பு பாசறை மாவட்ட செயலாளராக இருக்கிறார்.
இவரும், அண்ணாதுரை என்பவரும் சேர்ந்து அரசு சார்பில் வழங்கிய நிலத்திற்கு போலி பட்டா வாங்கி வீடு கட்டித்தருவதாக கூறி சுமார் 25-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து பணம் வசூல் செய்து மோசடி செய்துள்ளனர்” என்றுத் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் படி, புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக செண்பகசாமியை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அண்ணாதுரையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.