இமயமலைப் பகுதியில் சேதத்தை ஏற்படுத்தும் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (NGRI) செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 21) கணித்துள்ளது. NGRI என்னும் புவியியல் ஆராயச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் என்.பூர்ணச்சந்திர ராவ், இந்திய தட்டு ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக ஐந்து சென்டிமீட்டர்கள் நகர்கிறது என்றும் இதனால் இமயமலையில் அழுத்தம் உருவாகிறது என்றும் ANI செய்தி நிறுவனத்திடம் கூறினார். பூமியின் மேற்பரப்பு தொடர்ச்சியாக இயக்கத்தில் இருக்கும் பல தட்டுக்களால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, பூமியின் தட்டுகள் நகர்வதனால் இடம் பெறும் அதிர்வைக் குறிக்கும்.
“உத்தரகாண்டில் எங்களிடம் 18 நில அதிர்வு ஆய்வு மையங்களின் வலுவான நெட்வொர்க் உள்ளது. ஹிமாச்சல பிரதேசம் மற்றும் நேபாளத்தின் மேற்குப் பகுதிக்கு இடையே உள்ள நில அதிர்வு இடைவெளி என குறிப்பிடப்படும் இப்பகுதியில் உத்தரகாண்ட் உட்பட எந்த நேரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது” என்று டாக்டர் என் பூர்ணச்சந்திர ராவ் கூறினார்.
NGRI விஞ்ஞானி இது குறித்து மேலும் கூறுகையில், பூகம்பங்கள் ரிக்டர் அளவுகோலில் 8 வரை இருக்கும் என்று கூறினார். துருக்கியில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களைப் பற்றி பேசுகையில், சப்பார் கட்டுமானத்தின் விளைவாக நாடு அதிக சேதத்தை சந்தித்ததாக அவர் கூறினார். நிலநடுக்கத்தை தடுக்க முடியாது, ஆனால் இழப்பை தடுக்க முடியும். இந்த நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் கட்டடங்கள் கட்டுவதற்கு இந்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் அந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்,” என அறிவுறுத்தினார்.
கடந்த பிப்ரவரி 6 அன்று துருக்கியைத் தாக்கிய தொடர் பூகம்பங்கள், 45,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றதுடன், ஒரு கிராமத்தையே இரண்டாக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியா முழுவதும் 46,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற பேரழிவுகரமான நிலநடுக்கங்களுக்கு பிறகு டெமிர்கோப்ரு என்ற சிறிய கிராமம் இரண்டாகப் பிரிந்தது. சனிக்கிழமை (பிப்ரவரி 18) ஹடேயில் ஏற்பட்ட பெரிய விரிசலால் கிராமத்தில் விரிசல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.