ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், “1991-ஆம் ஆண்டு ஷேசன் அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த காலகட்டத்திற்குப் பிறகு நாம் ஜனநாயகப்பூர்வமான தேர்தல்களை சந்திக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
ஆளும் தரப்பு ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு ஆதரவாகவே இத்தனைக் கூத்துகளும் அரங்கேறுகின்றன. இந்த பார்முலா வெற்றியடைய தேர்தல் ஆணையம் அனுமதிக்குமேயானால், தமிழ்நாட்டில் இனி எந்தவொரு தேர்தலும் இம்மியளவும் நியாயமாக நடக்க வாய்ப்பேயில்லை.
’ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியாக ஆளையே கடிப்பது’ என்பதைப் போல ஈரோட்டில் தங்களுடைய ஆதரவு வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்காக ஆளுங்கட்சி ஜனநாயகத்தைக் கடித்துக் குதறுவதாகவே தெரிகிறது.
தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எதைத் தடுக்கவேண்டுமோ அதைத் தடுக்காமல் விட்டுவிட்டு, உப்புச்சப்பில்லாத ஒன்றுக்கும் உதவாத சில கட்டுப்பாடுகளை மட்டும் விதித்துவிட்டு, ஏதோ தேர்தல் அனைத்தும் ஜனநாயக ரீதியாக நடப்பதைப்போல காட்டிக்கொள்கிறார்கள்.
தமிழ் மக்களை இலங்கை அரசு முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்தது போல – ஈரோடு கிழக்கு தொகுதியில் அனைத்து சந்துபொந்துகளிலும் கண்ணுக்குத் தென்படாத முள்வேலிகளைப் போன்று கருப்பு – சிவப்பு கரைவேட்டிக்காரர்களால் வாக்காளர்கள் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திமுகவினர் செய்த முறைகேடுகளைப் பட்டியலிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி, ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவை அனுமதிப்பது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அநீதியாகும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த இடைத்தேர்தல் நாட்டின் ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். எதிர்காலத்தில் வாக்காளர்கள் அடைத்து வைக்கப்படுவதை தடுக்க, தேர்தல் ஆணையம் உடனடியாக வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும் என்று கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.