ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அங்கு நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சீமான் அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி ஈரோடு திருநகர் காலனி பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த சீமான், அருந்ததியினர் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சையானது. அங்கு, தமிழகத்தை சேர்ந்த அருந்ததியர் மக்கள் துப்புறவு தொழிலுக்காக ஆந்திராவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என சீமான் கூறியிருந்தார்.
இதனை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ் புலிகள் அமைப்பினர் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பலரும் அவரது பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இருப்பினும் தான் தவறாக எதுவும் பேசவில்லை என்றும் வரலாற்றில் உள்ளதைதான் பேசியதாக சீமான் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து உரிய விளக்கமளிக்க ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். உரிய விளகத்தை அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் சீமானின் பேச்சு கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM