உதகை: தொடர் உறைபனி காரணமாக உதகை அரசு தாவரவியல் பூங்கா பொலிவிழந்து காணப்பட்டாலும் அங்கு பழமையான கண்ணாடி மாளிகையில் வளர்க்கப்பட்டுள்ள 50 வகையான வண்ண மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. மலைகளின் இளவரசியான உதகையில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை கடுமையான குளிர் வாட்டி வதைக்கும். இதனால் அந்த காலகட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே காணப்படும்.
சீசன் இல்லாத நேரத்தில் உறைபனி நிலவும் காலங்களில் மலர்கள் பூத்தாலும் பணியில் கருகிவிடும் இந்நிலையில் அங்குள்ள பழமையான கண்ணாடி பூங்காவில் முதல் முறையாக அறிய வகை துலிப்மலர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பல அரியவகை வண்ணமலர்கள் காட்சிப்படுத்தபட்டுள்ளன. அதனை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து புகைபடமும் எடுத்து செல்கின்றனர்.
பெடோனியா, காகித பூ, பிகோனியா,டெய்சி போன்ற வழக்கமான மலர்களோடு ஜம்மு காஷ்மீர் போன்ற பனி பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய துலிப் மற்றும் ஆலந் மலர் செடிகள் பயணிகளின் கண்களுக்கு நல்விருந்தாக அமைந்துள்ளன. ரம்மியமான சூழலில் இந்த வண்ண மலர்களை உள்ளூர், வெளியூர் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களை சேர்ந்த பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
உதகை தாவரவியல் பூங்காவில் ஆண்டு தோறும் சீசன் காலங்களில் சுமார் 30 லட்சம் பயணிகள் வருகை தருவர். தற்போது சீசன் இல்லாத இந்த உறைபனி காலத்திலும் சுற்றுலாப்பயணிகளை கவர மாவட்ட நிர்வாகமும், சுற்றுலா துறையும் இனைந்து செய்துள்ள இந்த ஏற்பாடு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.