ஈரோடு: தமிழிசை, இல.கணேசன், சிபிஆர் வரிசையில், ஒரு மாதத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படுவார் என அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்இளங்கோவனை ஆதரித்து, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு, அண்ணா டெக்ஸ் சாலை, காமாட்சி காடு பகுதிகளில் அவர் பேசியதாவது: பொதுத்துறை நிறுவனங்களை வழங்கியதால், அதானியின் சொத்து மதிப்பு, ரூ.6 லட்சம் கோடியாக உயர்ந்து, உலகில் 2-வது பணக்காரர் என்ற இடத்தைப் பெற்றார். தற்போது, அவரது முறைகேடுகுறித்த தகவல் வந்ததால், 17-வதுஇடத்துக்கு தள்ளப்பட்டு விட்டார்.
மக்களால் தேர்வு பெற்று பழனிசாமி முதல்வராகவில்லை. அவர் தமிழக மக்களுக்கு உண்மையாக இருந்தது இல்லை. பாஜக ஒரு கட்சி அல்ல. அது ஆளுநர்களுக்கு பயிற்சி கொடுக்கும் இடம். அங்குபயிற்சி பெற்றவர்கள் ஆளுநராகிவிடுவார்கள். தமிழிசை, இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆளுநராகி விட்டனர். இந்த வரிசையில், ஒரு மாதத்துககுள் ஓ.பன்னீர்செல்வம் ஏதாவது ஒருமாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படுவார்.
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, மகளிருக்கான உரிமைத்தொகையாக ரூ.1,000 வழங்கும்திட்டத்தை இன்னும் 6 மாதங்களில் முதல்வர் செயல்படுத்துவார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல்வெற்றி அமைய வேண்டும். இவ்வாறு உதயநிதி தெரிவித்தார்.