கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி மாணவியின் தாய் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த வந்த மாணவி, கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார்.
மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. அதன்படி வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி மாணவியின் தாய் செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சிறப்பு புலனாய்வுக் குழு ஏன்?
அதில், சிபிசிஐடி விசாரணை நியாயமாக இல்லை எனவும், கொலை குற்றச்சாட்டின் கீழ் இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் மறைத்துள்ளதாகவும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் தனக்கு காட்டப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடம், ஆதாரங்களின் தடயம் தெரியாத அளவுக்கு முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை வாதம்!
இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்த போது, சம்பவம் நடந்த போது மாணவியின் தந்தை சிபிசிஐடி விசாரணை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார் எனவும், அந்த மனு நிலுவையில் இருப்பதாகவும், அதனால் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், மாணவியின் செல்போன் தடயவியல் ஆய்வு அறிக்கையை பெற்ற பின், இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்கு இந்நீதிமன்றம் நான்கு வார கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
விசாரணை ஒத்திவைப்பு!
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மாணவியின் தாய் தாக்கல் செய்த மனுவை, ஏற்கனவே அவரின் தந்தை தாக்கல் செய்து நிலுவையில் உள்ள மனுவுடன் சேர்த்து மார்ச் 8ஆம் தேதிக்கு விசாரணை தள்ளிவைத்தார்.