நாகை: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடக்கத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இயேசு உயிர்த்தெழுந்த தினத்தை கிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடிவருகின்றனர். அதற்கு முந்தைய 40 நாட்களை தவக்காலமாக கடைபிடிக்கும் அவர்கள் அதன் முதல் நாளை சாம்பல் புதன் கிழமையாக அனுசரிக்கின்றனர். இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துவ தேவாலயங்களில் அதிகாலையில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு நெற்றியில் சாம்பல் பூசி இயேசுவை வழிபட்டனர். தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற தேவாலயங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் 40 நாள் தவக்காலம் சிறப்பு வழிபாட்டுடன் துவங்கியது. இந்த சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டவர்களுக்கு அருட்தந்தையர்கள் சாம்பலை பூசி ஆசி வழங்கினர்.
திருப்பலியில் உக்ரைன், ரஷ்யா போர் விரைவில் முடிவுக்கு வர பிராத்தனை செய்யப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து கிறிஸ்தவ ஆலையங்களிலும் சாம்பல் புதன் வழிபாடு அனுசரிக்கபட்டது. பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி கலந்துகொண்டு பங்குபெற்று இறை மக்களின் நெற்றியில் சாம்பலை பூசி தவக்காலத்தை தொடங்கிவைத்தார்.
உலக புகழ் பெற்ற பனிமாதா பேராலயம், திரு இருதய ஆலையம் உள்ளிட்ட இடங்களில் மறைமாவட்ட ஆயர் ஸ்டிபன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதே போன்று சாம்பல் புதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றன. நாகர்கோவில், கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் நிகழ்ச்சியில் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்துகொண்டு சிறப்பு பிராத்தனை செய்தார். இதில் சுற்றுவட்டார கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.