விஜய்க்கு மட்டுமல்ல தமிழ்சினிமாவுக்கே கில்லியான பரபர விறுவிறு ‘கில்லி’ படம் வெளியாகி 20 ஆண்டுகளை நெருங்கப்போகிறது. விஜய்-த்ரிஷா காதல், காமெடி, சண்டை, சேசிங் என கில்லி விளையாட்டைப்போலவே மூச்சு முட்டும் ஸ்பீடில் ஓட்டம்பிடிக்கும் திரைக்கதை. அதுவும், முத்துப்பாண்டியின் ஒருதலைக் காதல் இன்றளவும் மீம்ஸ் ட்ரெண்டாகி வரும் படம். பாடல்கள் வைரல் ஹிட்டடித்தன.
2கே கிட்ஸையும் ‘கில்லி’ விட்டுவைக்குமா என்ன? ‘கொக்கர கொக்கரக்கோ’ பாடலுக்கு அழகாக நடனமாடி இன்ஸ்டா ரீல்ஸில் ஹார்ட்டின்களைக் குவித்து ட்ரெண்டாக்கி வருகிறார்கள். இந்தச் சூழலில், அப்பாடலைப் பாடிய பாடகர் உதித் நாராயணைத் தொடர்புகொண்டு பேசினேன்…
நான் மும்பையில் வசித்தாலும் ‘கொக்கரக் கொக்கரகோ’ பாடலுக்கு தமிழக இளைஞர்கள் அழகாக டான்ஸ் ஆடும் இன்ஸ்டா ரீல்ஸ்களை பார்த்துக்கொண்டுதான் வருகிறேன்.
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இத்தனை வருடங்கள் கழித்து, இப்போதுதான் இப்பாடலை ட்ரெண்ட் ஆக்குகிறார்கள். ஆனால், பாடல் வெளியானபோதே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. படமும் மிகப்பெரிய ஹிட். இப்பாடலை பாடுவதற்கு எனக்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர் வித்யாசாகர் சாருக்கும் குறிப்பாக, சூப்பர் ஸ்டார் விஜய் சாருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
‘கில்லி’ படத்தின் இசை, பாடல் வரிகள், எனது குரல் போன்றவற்றால் ஹிட்டானாலும் விஜய் சாரின் நடனமும் முக்கிய காரணம். அற்புதமாக நடனமாடியிருப்பார். தனிப்பட்ட முறையிலும் விஜய் சாரை ரொம்பப் பிடிக்கும். ‘கில்லி’ படமும் பாடல்களும் ஹிட்டானபோது விஜய் சாரை சந்திக்கவில்லை. ஆனால், நான் பாடியது அவருக்கு மிகவும் பிடித்ததால் ரசித்து நடனமாடியுள்ளார். ஹிட் ஆனபிறகு எனக்கு நன்றி சொல்லியதாக தரணி சார் தெரிவித்தார். ஒரு பாடகராக எனது முழுத்திறமையையும் வெளிப்படுத்திப் பாடினேன். அதற்கான, பலனை தமிழக மக்கள் கொடுத்து வருவதும் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்வதும் கடவுளின் கருணைதான்” என்று உற்சாகமாக பேசுவதோடு பாடலைப் பாடியும் காட்டி நமக்கு எனர்ஜியூட்டுகிறார்.