சத்தீஸ்கர் மாநிலத்தில், முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கவிருக்கிறது.
இந்த நிலையில், சத்தீஸ்கரில் நிலக்கரி தொழில் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், இடைத்தரகர்களும் சட்டவிரோதமாக பண வசூலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பல்வேறு இடங்களில் பிப்ரவரி 20-ம் தேதி அமலாக்கப்பிரிவு சோதனை நடத்தியது.
சத்தீஸ்கரில் நிலக்கரி எடுத்துச்செல்பவர்களிடம் சட்டவிரோதமாக ரூ.540 கோடி வசூலிக்கப்பட்டிருக்கிறது என்பது அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு. இதில், முதல்வர் பூபேஷ் பாகலின் துணைச்செயலாளராக இருந்த சௌமியா சௌராசியா முக்கிய நபராக செயல்பட்டார் என்றும் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து அவருக்கு ரூ.36 கோடி நேரடி பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது என்றும் அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
சௌமியா சௌராசியா உள்ளிட்ட அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பலர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தேவேந்திரராவ், செய்தித்தொடர்பாளர் ஆர்.பி.சிங், மாநிலப் பொருளாளர் ராம்கோபால் அகர்வால் உட்பட காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலரின் இடங்களில் அமலாக்கப்பிரிவு சோதனை நடத்தியது.
அமலாக்கப்பிரிவின் சோதனை குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த முதல்வர் பூபேஷ் பாகல், “2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, சத்தீஸ்கர் மாநிலத்தில் பிப்ரவரி 24-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை மாநாடு நடத்தவிருக்கிறோம். அதற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அமலாக்கத்துறை சோதனையை நடத்துகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.
அமலாக்கப்பிரிவின் இந்தச் சோதனையை விமர்சித்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “எங்கெல்லாம் அமலாக்கத்துறை சோதனை நடத்த வேண்டுமோ, அங்கெல்லாம் சோதனை நடத்தப்படுவதில்லை. கௌதம் அதானி தொடர்புடைய மோசடி குறித்து சோதனை நடத்தப்படுவதில்லை. ஆனால், எதிர்க்கட்சிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்துகிறார்கள். இது எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குகிற மூன்றாம் தர அரசியல். இதுவொரு அறிவிக்கப்படாத அவசரநிலைக் காலம்” என்றார்.
ஜெய்ராம் ரமேஷின் கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தும். எனவே, பழிவாங்குதல் என்ற கோணத்தை இங்கு கொண்டுவர வேண்டாம். பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அகற்றப்பட்டதற்கு ஊழல்தான் காரணம்” என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவரும் மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. அங்கு, இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மேலும், அடுத்த ஆண்டு மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில்தான், மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவிருக்கும் நேரத்தில், அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றிருக்கிறது.
சத்தீஸ்கரில் மீண்டும் ஆட்சியமைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கையுடன் சொல்லிவருகிறார்கள். அது, பா.ஜ.க-வுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லும் காங்கிரஸ் கட்சியினர், எதிர்க்கட்சியினருக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அமலாக்கப்பிரிவை ஏவிவிட்டிருக்கிறார்கள் என்று கூறுகின்றனர்.