வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் சிவசேனா பெயர், வில் அம்பு சின்னம் ஒதுக்கியதற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில், 55 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்றார். இந்நிலையில், உத்தவ் மீது அதிருப்தி அடைந்த 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியாக பிரிந்தனர். பா.ஜ., ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி ஏற்றார். சிவசேனா கட்சிக்கு ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே தரப்பு உரிமை கோரி வந்தது.
கடந்த 2019ல் நடந்த தேர்தலில் மக்களின் ஓட்டுகளை பெற்ற 76 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் ஷிண்டேவின் பக்கம் இருப்பதால், அவரது அணியே உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. கட்சியின் வில் அம்பு சின்னத்தையும் ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கியது. இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று(பிப்.,22) விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு: ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா பெயர், வில் அம்பு சின்னம் ஒதுக்கியதற்கு இடைக்காலதடை விதிக்க முடியாது. இந்த வழக்கு தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே தரப்பு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் ஷிண்டே தரப்பு 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் எனவும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement