புதுடெல்லி: இந்திய வெளியுறவு அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர் தனது பணியில் தோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி காரணங்களை அடுக்கியுள்ளது.
சீன எல்லை விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், ”சீன பொருளாதாரம் மிகப் பெரியது. நமது பொருளாதாரம் மிகச் சிறியது. அப்படி இருக்கும்போது சீனாவுடன் போர் புரிவதை நாம் தேர்ந்தெடுக்க முடியாது” என தெரிவித்திருந்தார்.
இதைச் சுட்டிக்காட்டி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநதே விமர்சித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: ”வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையை தரம் தாழ்த்திவிட்டார். அவரது கருத்து கண்டிக்கத்தக்கது. தொழிலதிபர்களின் ஒப்பந்தங்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டதாக அவரது பேச்சு இருக்கிறது.
நமது எல்லையையும் இறையாண்மையையும் பாதுகாக்கும் ஆற்றல் நமக்கு இல்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகிறார். இது நமது ராணுவத்தை, நமது ராணுவ வீரர்களை இழிவுபடுத்தும் செயல். அவர்களின் தன்னம்பிக்கையை குலைக்கக்கூடிய செயல். வெளியுறவுத் துறை அமைச்சர் ஒருவரின் மிக மோசமான கருத்து இது. வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர் தோல்வி அடைந்துவிட்டார்.
சீனாவில் அதிக காலம் இந்திய தூதராக இருந்தவர் என ஜெய்சங்கர் தன்னை கூறிக்கொள்கிறார். சீனாவை ஒட்டிய எல்லையில் ஏப்ரல் 2020-க்கு முன்பு இருந்த நிலை மீண்டும் எப்போது வரும் என அவரால் கூற முடியுமா? சீனா உடன் இந்தியா 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தக பற்றாக்குறையைக் கொண்டிருக்கிறது. அவர்கள் தங்கள் ராணுவத்தை வலுப்படுத்திக்கொள்ள நமது பணம் பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் நீண்ட காலம் இந்திய தூதராக இருந்த ஜெய்சங்கர், எல்லையில் நிகழ்ந்த சீன ஆக்கிரமிப்பு குறித்து என்ன கூறுவார்? நமது வீரர்கள் செய்த உயிர்த் தியாகம் குறித்து அவரால் ஏதாவது கூற முடியமா?
பாஜக தனது அரசியல் எதிரிகளை தொடர்ந்து தாக்கி வருகிறது. ஆனால், நமது நாட்டின் பாதுகாப்புக்கான விலையாக அது மாறிவிடக்கூடாது. வெளியுறவுக் கொள்கை என்பது நாட்டின் நலனுக்கானதாக இருக்க வேண்டும். அதானி போன்ற ஒரு நிறுவனத்தின் நலனுக்கானதாக இருக்கக் கூடாது” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநதே குற்றம் சாட்டியுள்ளார்.