சென்னை: சென்னையில் நில அதிர்வு நிகழ்ந்ததாக நில அதிர்வு ஆய்வு மையத்தில் பதிவாகவில்லை என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன.
சென்னையில் ராயப்பேட்டை, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் இன்று (பிப். 22) காலை லேசான நில அதிர்வு போன்று உணர்ந்துள்ளனர். இது தொடர்பாக சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையமும், தேசிய நில அதிர்வு ஆய்வு மையமும் விளக்கம் அளித்துள்ளன.
அந்த விளக்கத்தில், ”நில அதிர்வு அல்லது நில நடுக்கம் குறித்து பதிவு செய்வதற்கான தேசிய நில அதிர்வு மையத்தின் நிலையங்கள் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கொடைக்கானலில் உள்ளன. சென்னைக்கு அருகில் திருப்பதியிலும் ஒரு நிலையம் உள்ளது. இவை எதிலும் நில அதிர்வு ஏற்பட்டதற்கான பதிவு இல்லை. நில அதிர்வு ஏற்பட்டு அது 3 முதல் 5 நிலையங்களில் பதிவானால் மட்டுமே நில அதிர்வு ஏற்பட்டதை உறுதிப்படுத்த முடியும். ஆனால், ஒரு நிலையத்திலும் நில அதிர்வு பதிவாகவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில அதிர்வுணர்வுக்கு வேறு காரணங்கள் இருக்கலாம்: இந்தப் பகுதிகளில் நடக்கும் கட்டுமானப் பணிகள், நில அதிர்வுக்குக் காரணமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ராயப்பேட்டை, அண்ணாசாலை பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்றும், எனவே, நில அதிர்வுக்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் சென்னை மெட்ரோ ரயில் விளக்கம் அளித்துள்ளது.