சென்னை ராயப்பேட்டையில் பிரபல வணிக வளாகமாக எக்ஸ்பிரஸ் அவென்யூ செயல்பட்டு வருகிறது. இங்குள்ள உணவகம் ஒன்றில் இன்று (பிப்ரவரி 22) காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். உடனே மயிலாப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எக்ஸ்பிரஸ் அவென்யூ தீ
தீவிபத்து குறித்து தகவலறிந்து போலீசார் விரைந்துள்ளனர். தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர், விபத்திற்கான காரணம் குறித்து விரிவான தகவல்கள் தெரியவரும் எனச் சொல்லப்படுகிறது. ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தை பொறுத்தவரை கடந்த 2010ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 90 ஆயிரம் சதுர அடி உடன் சென்னையின் மிகப்பெரிய வளாகமாக காணப்படுகிறது.
பிரம்மாண்ட வணிக வளாகம்
கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், தியேட்டர்கள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஏராளமான உணவகங்களும் இருக்கின்றன. இதற்காக 25 கவுன்ட்டர்கள் இயங்கி வருவதாக தெரிகிறது. ஓரியண்டல், நார்த் இந்தியன், சவுத் இந்தியன், அமெரிக்கன், இத்தாலியன் என பல்வேறு விதமான உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன.
லாயிட்ஸ் சாலையில் நில அதிர்வு
இந்த உணவகம் ஒன்றில் தான் தீவிபத்து ஏற்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக சென்னையில் இன்று காலை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் சாலை பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் குலுங்கியதால் உடனே ஊழியர்கள் அனைவரும் அச்சத்துடன் வெளியே ஓடி வந்தனர். அதன்பிறகு நிலைமை சீரடைந்ததாக சொல்லப்படுகிறது.
மெட்ரோ பணிகள் காரணமா?
ஒருவேளை சென்னை மெட்ரோ ரயில் பணிகளால் இத்தகைய நில அதிர்வு ஏற்பட்டிருக்குமோ? என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் பல்வேறு இடங்களில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பூமிக்கு அடியில் இயந்திரங்களை வைத்து வேலைகள் நடப்பதால் நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்பட்டது.
அடுத்தடுத்து பரபரப்பு
ஆனால் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) மறுப்பு தெரிவித்துள்ளது. அண்ணா சாலையில் ஏற்பட்ட நில அதிர்வு மெட்ரோ பணிகளால் ஏற்படவில்லை. அந்த பகுதியில் எந்தவித மெட்ரோ பணிகளும் நடக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது. இதன் காரணமாக லாயிட்ஸ் சாலை பகுதி மிகவும் பரபரப்பாக காட்சி அளித்து வருகிறது.
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலக நாடுகளை பெரும் சோகக் கடலில் மூழ்க வைத்துள்ளது. சென்னையில் நில அதிர்வு என்றதும் அந்த நியாபகம் தான் பலருக்கும் வந்து சென்றது. இதனைத் தொடர்ந்து ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீவிபத்து ஏற்பட்டு சென்னை மாநகரை அடுத்த பரபரப்பிற்கு ஆளாக்கியது. இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன.