புதுடெல்லி: உச்ச நீதிமன்ற விசாரணைகளை எழுத்து வடிவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, மொழிநடைமுறை தொழில்நுட்பம் மூலம் உச்சநீதிமன்ற விசாரணைகளை நேற்று முதல் நேரடியாக எழுத்து வடிவில் ஒளிபரப்பும் நடவடிக்கை பரிசோதனை அடிப்படையில் தொடங்கியது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், விசாரணைகள் எழுத்து வடிவில் நேற்று ஒளிபரப்பப்பட்டன. இதை உச்சநீதிமன்ற இணையளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு முன் வழக்கறிஞர்களிடம் ஆய்வுக்காக அளிக்கப்படும். இது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:
விவாதங்களை எழுத்து வடிவில் வெளியிடுவதில் உள்ள சிக்கல்களை நீக்குவதற்காக 2 நாள் பரிசோதனை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்பின், இது வழக்கமான நடைமுறையாக மாறும். விசாரணை விவரங்களை நேரடியாக எழுத்து வடிவில் வழங்குவதற்கான சாத்தியங்களை ஆராய நாங்கள் முயற்சிக்கிறோம். அதன்பின் விவாதங்கள் நிரந்தரமாக பதிவு செய்யப்படும். இவற்றை சட்டக் கல்லூரிகளால் ஆராய முடியும். இவ்வாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கூறினார்.
அவரது அமர்வில் மகாராஷ்டிரா வழக்கு விசாரணை சப்-டைட்டிலுடன் நேற்று தொடங்கியது.