குழந்தையை `சிங்கிள் ஃபாதராக’ வளர்க்கப் போராடும் ஒரு தந்தையின் பாசமும், அதனால் அவரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும் கதைகளமாகக் கொண்டு எடுக்கப்பட்டத் திரைப்படம் `டாடா’ (Dada). நடிகர் கவின் நடிப்பில் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இதற்கு அடுத்த வாரம் தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் வெளியானது.
A fine moment to cherish forever 🙂
Thanks a lot @dhanushkraja sir ♥️ pic.twitter.com/XDqI9HV1jh— Kavin (@Kavin_m_0431) February 21, 2023
இந்நிலையில் புதுமுக ஹீரோவாக வளர்ந்துவரும் நடிகர் கவினை போனில் அழைத்துப் பாராட்டியுள்ளார் தனுஷ். இந்த நெகிழ்ச்சியானத் தருணத்தைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவின், “‘ஹாய் கவின் நான் தனுஷ் பேசுறேன்…’ நான் கேட்டது உண்மைதானா என அறிய சில நேரமானது. அந்த வியப்பில் இருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. டாடா படத்தை பார்த்துவிட்டு தனுஷ் சார் எனக்கு கால் செய்தது இன்ப அதிர்ச்சியானத் தருணம். உங்களின் படங்களை, உங்களின் திறமையை நான் தியேட்டரில் பார்த்து வியந்திருக்கிறேன். இன்று உங்களிடமிருந்து வந்த அழைப்பை வெறும் நன்றியினால் ஈடு செய்திட முடியாது. வளர்ந்து வரும் நடிகர்களைப் பாராட்டுவதற்காக உங்களை நான் பெரிதும் மதிக்கிறேன். உங்களின் ‘வாத்தி’ திரைப்படத்திற்கும் எனது வாழ்த்துகள். உங்களின் எதிர்கால படைப்புகளைக் காணக் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.