வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
இந்த வாரம் பொதுத் தேர்வு எழுதப்போகும் என் மகனுக்கு, சென்றவார இறுதியில் தலைவலியுடன் கூடிய ஜுரம் ஆரம்பித்தது. படிக்க முடியாமல் குளிருகிறது என படுக்கையில் சுருங்கி படுத்துக்கொண்டான். அவசரமாக அவனை எழுப்பி ஒரு டோலோ 650 கொடுத்து மாலை வரை பார்க்கலாம் என நினைத்தேன். ஆனால் மாலையிலும் ஜுரம் விடாமல் அதிகரிக்கவே, வீட்டின் அருகில் இருக்கும் ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அவர் இவனை பரிசோதித்து விட்டு இது வைரல் ஃபீவர் தான். இரண்டு மூணு நாள் நல்ல ரெஸ்ட் எடுக்கட்டும். சரியா போயிரும் என்று கூறி சில மாத்திரைகளை எழுதித் தந்தார்.
அடுத்தவாரம் எக்ஸாம் வைத்துக் கொண்டு இந்தக் குழந்தைக்கு (வயது 17) ஏன் இந்த நிலைமை என்று என் தாயுள்ளம் பதறியது.
அடுத்த நாளில் 102 ல் இருந்து 101 ஆகக் குறைந்தது..தலைவலி விடவில்லை. மாத்திரைகளை வேளா வேளைக்கு கொடுத்தபடியே, நான் மட்டும் சென்று மீண்டும் அந்த மருத்துவரைப் பார்த்தேன்.
என் கண்ணில் தெரிந்த பீதியைப் பார்த்த அவர், பயப்படாதீங்க.. நாளைக்கு சரியா போகலன்னா,, நீங்க வேணா அவனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்று ப்ளட் டெஸ்ட்க்கு கொடுத்துடுங்க என அறிவுரை கூறினார். அவர் எங்கள் குடியிருப்பில் இருக்கும் மருத்துவர். தனியாக மருத்துவமனை என வைத்துக் கொள்ளவில்லை. சரி என்று மறுநாள் வரை பொறுத்திருந்தேன்..
இதற்கு நடுவில் ஆறுதலை தேடும் என் மனம் வாட்ஸ் ஆப்பில் என் மகனின் உடல் நிலையைப் பற்றிய கவலையை என் தோழிகளிடம் பகிர்ந்து கொண்டது.. அவர்களில் சிலர், எக்ஸாம் டைம் ல ரிஸ்க் எடுக்காத.. ஆஸ்பிட்டலுக்குப் போய்டு என ரிப்ளை செய்திருந்தனர்..
எனக்கோ ஆஸ்பிட்டல் சென்று டோக்கன் வாங்கி, பெரிய டாக்டர் வரும்வரை காத்திருந்து, அங்கிருக்கும் மற்ற நோயாளிகளைப் பார்த்து டென்ஷனாகி.. என் மகனையும் அங்கு நீண்டநேரம் உட்கார வைத்து கஷ்டபடுத்த வேண்டுமா என்றெல்லாம் பலவாறாக சிந்தித்து, பேசாமல் வீட்டிலேயே அவன் தூங்கட்டுமே.. இன்னும் ஒருநாள் பொறுத்திருந்து பார்க்கலாம் என மனதை தைரியப் படுத்திக் கொண்டேன்.
உணவு விஷயத்தில் இது போன்ற நேரங்களில் ரசம் சாதம் மட்டுமே கைக்கொடுக்கும். அதனால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. முதல் நாளே மருத்துவரும் ORS கொடுத்துடுங்க என்று வேறு கூறியிருந்தார்.
இருக்கவே இருக்கிறது நமக்குத் தெரிந்த சூப் வகைகள்.. அவ்வப்போது அவனை எழுப்பி குடி தெம்பு வரும் என கட்டாயப் படுத்தினேன். தினம் மூன்றுவேளையும் சீரகத்தையும் மிளகையும் தண்ணீரில் போட்டு அவை இதுக்கு மேல எங்கள கொதிக்க வைக்காதீங்க.
சூடு தாங்கல என கதறும் அளவிற்கு கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரை அவனை குடிக்க சொன்னேன். இரண்டு நாள் சுடு தண்ணீரைக் குடித்தவன், மூன்றாவது நாள் சுடு தண்ணீரைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டான். வேறுவழியில்லை தம்பி .. குடிச்சு தான் ஆகணும் என மிரட்டினேன். முதல் நாள் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு அதன்மேல் போர்வையும் போத்திக் கொண்டு தூங்கியவன், இரண்டாம் நாள் ஸ்வெட்டரைத் தூக்கிப் போட்டான். மூன்றாம் நாள் கனமான போர்வையும் போய், மெலிதாக இருக்கும் போர்வையை எடுத்துக் கொண்டு, மின்விசிறியின் வேகத்தை அதிகரித்தான். இவையெல்லாம் உடல்நிலை முன்னேறியதற்கான அறிகுறிகள் என நான் சந்தோஷமடைந்தேன்..
தினமும் கொஞ்சம் கொஞ்சமாக ஜுரம் குறைய.. வேறு ஆஸ்பிட்டல் செல்வதை தவிர்த்தேன். நடுவில் எனக்குத் தெரிந்த இளம்பெண் மருத்துவரிடம் வாட்ஸ்ஆப்பில் இவன் நிலைமையை பகிர்ந்து கொண்டேன். அவரும் இது நார்மல் ஃபீவர் தான்.. அஞ்சு நாளைக்கு அப்புறமும் டெம்ரேச்சர் இருந்துச்சுனா ப்ளட் டெஸ்ட்க்கு கூட்டிக்கிட்டு போங்க.. இல்லன்னா விட்ருங்க.. நிறைய ஃபளூயிட்ஸ் குடுங்க.. சாலிட் ஃபுட் கேட்டா குடுங்க.. கம்பெல் பண்ணாதீங்க என்றார். அவருடைய பதிலும் கொஞ்சம் ஆறுதல் அளிக்கவே.. நாட்களை டென்ஷனோடு கடத்தினேன். இவன் நல்லபடியாக தேர்வு எழுத வேண்டுமே என்ற கவலை மட்டும் இருந்துக் கொண்டே இருந்தது..
ஒருவழியாக நேற்று முதல் ஜுரம் குறைந்து, அவன் எழுந்து உட்கார ஆரம்பித்ததில் கொஞ்சம் மனநிறைவு ஏற்பட்டது.
காய்ச்சல் ஆரம்பித்தபோது படிக்கலன்னா பரவால்ல.. ரெஸ்ட் எடு என்று சொன்ன நான்..இன்று காலையிலிருந்து …டைம் வேஸ்ட் பண்ணாம படிடா என்று பழைய பல்லவியை ஆரம்பித்தேன்.. வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பிய ஒரு திருப்தி எனக்குள்…
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்.. இது போன்ற காய்ச்சல் என் இளவயதிலும் வந்திருக்கிறது.. ஆனால் குடும்பத்தில் எந்தப் பதட்டமும் இருக்காது. அம்மா ஏரியாவில் இருக்கும் ஒரே ஒரு ஆஸபத்திரிக்கு அழைத்துச் செல்வார்.. சுமாரான கூட்டம் இருக்கும் அங்கு. ஒரு வெள்ளை புடவை அணிந்த நர்ஸ் உட்கார்ந்த இடத்திலேயே உடலின் வெப்பத்தைப் பார்த்து, சீட்டில் பெயரையும் எத்தனை ஃபாரன்ஹீட் என்பதையும் எழுதி கையில் தருவார்..
எல்லோருக்கும் ஒரே ஒரு தெர்மாமீட்டர் தான்.. அதுவும் வாயில் வைத்து தான் பார்ப்பார்.. ஒரு கண்ணாடி குடுவையில் இருக்கும் திரவத்தில் ஒருவர் வாயில் வைத்து எடுத்த தெர்மாமீட்டரை..அதில் நுழைத்தால் ஸ்டெரிலைஸ் ஆகி விடும் தெர்மாமீட்டர்.. அங்கிருக்கும் மங்கிய வெளிச்சத்தில் அவர் எப்படி பாதரசம் மேலேறி,, அதைப் பார்த்து கண்ணாடி அணியாமல் துல்லியமாக ரீடிங்கை எடுத்தார் என்பதை நினைத்தால் இப்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
எனக்கு பிரகாசமான இடங்களில் நின்றபடி, கண்ணாடி அணிந்து பார்த்தால் கூட , டெம்ப்ரேச்சர் ரீடிங் சரியாக பார்க்கமுடிவதில்லை.. டிஜிட்டல் தெர்மாமீட்டர் தான் வசதியாக இருக்கிறது.. சீட்டுடன் உள்ளே சென்றால், டாக்டர், ஸ்டெதஸ்கோப் செக்கிங் முடித்து விட்டு, கண்களை ஒரு தரம் பார்த்து விட்டு மருந்து எழுதிக் கொடுப்பார்.. அவ்வளவு தான்.. அறிவுரைகள் எதுவும் இருக்காது.
குறிப்பாக ஸூப் குடுங்க… ORS இத்யாதிகள்.. Body dehydration ஆகிய வார்த்தைகள் எல்லாம் அறிந்திராத காலகட்டம் அது. வீட்டிற்கு வந்தால் அறையின் ஒரு மூலையில் பாயைப் போட்டு தூங்கச் சொல்வார்கள். ஒருசிறிய டம்ப்ளரில் ரசத்தைக் குழைத்து குடிக்கத் தருவார்கள்.. அவ்வளவுதான்.. அடுத்தநாள் உடம்பு ஒரே மாத்திரையில் ஃப்ரெஷ் ஆகிவிடும்.. நான்கைந்து நாள் வரை காய்ச்சல் இழுக்காது.. குறிப்பாக வீட்டில் தெர்மாமீட்டர் என்ற ஒரு பொருள் இருக்கவே இருக்காது. அடுத்த நாள் காலை பள்ளிக்குச் செல்கிறேன் என்றால் யாரும் தடுக்க மாட்டார்கள். வெயில் விளையாடி, மழையில் நனைந்து என உடம்பு தன்னைத் தானே சரி செய்து கொள்ளும்.
ஆனால் இப்போதைய வைரஸ்கள் படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.. வாழ்க்கை முறை, வானிலை மாற்றங்கள், உணவு பழக்கம், எல்லாமே ..சின்னசின்ன உடல் உபாதைகளை நம்மால் பொறுமையுடன் பொறுத்துக் கொள்ள விடாமல்.. மனம் அனைத்திற்கும் உடனடி நிவாரணம் என்ற ஒன்றைத் தேடுகிறது.. இது சரியா..தவறா..என யோசிக்க நேரமில்லை எவருக்கும்..
நோய் நாடி.. நோய் முதல் நாடி என்று நோய் பற்றி வள்ளுவர் எழுதிய குறளை இனிவரும் காலங்களில் நாம் நினைவில் வைப்போமா?? சந்தேகம்தான்….
-Mrs. J. Vinu
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.