பெங்களூரு: பகிரங்க மோதலில் ஈடுபட்ட கர்நாடக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரி – ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா ஆகியோர் மீது அரசு நடவடிக்கை பாய்ந்து உள்ளது. இருவரும், அவரவர் வகித்து வரும் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். வேறு பணி ஒதுக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். ரூபாவின் கணவரான ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக அறநிலையத் துறை கமிஷனராக பணியாற்றியவர் ரோகிணி சிந்துாரி, 39. இவர் மைசூரில் கலெக்டராக இருந்தபோது, அம்மாவட்டத்தைச் சேர்ந்த ம.ஜ.த., – எம்.எல்.ஏ., மகேஷுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தார். சமீபத்தில் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி மணிவண்ணன் மூலமாக, மகேஷிடம், ரோகிணி சமாதானம் பேசினார். இதற்கு மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா எதிர்ப்பு தெரிவித்தார்.
பல குற்றச்சாட்டுகள்
‘இந்திய நிர்வாக சேவையில் பணியாற்றும் ஒரு அதிகாரி, எம்.எல்.ஏ.,வை தேடி சென்று சமாதானம் ஆவது ஏன்’ என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினார். அவர் மீது 19 குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
ஒரு குற்றச்சாட்டில் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மூன்று பேருக்கு, ரோகிணி, தன் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பினார் எனவும் கூறி, அந்த படங்களையும் வெளியிட்டார். தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த ரோகிணி, மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடப்பதாக ரூபாவை விமர்சித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரூபா, ரோகிணி தன் நிர்வாண படங்களை, சில அதிகாரிகளுக்கு ‘வாட்ஸ் ஆப்’பில் அனுப்பிவிட்டு அழித்ததாக கூறினார்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி குற்றச்சாட்டுகள் கூறினர்.
இருவரின் குழாயடி சண்டையால், வெறுப்படைந்த முதல்வர் பசவராஜ் பொம்மை, விளக்கம் கேட்டு இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப, தலைமை செயலர் வந்திதா சர்மாவுக்கு உத்தரவிட்டார். இதன்படி, அவர்களுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் இருவரும் தனித்தனியாக, தலைமை செயலரை சந்தித்து, விளக்கம் அளித்ததுடன், எதிர் தரப்பு மீது புகார் மனுக்களை அளித்தனர்.
அப்போது, ‘சமூக வலைதளங்களில், ஒருவர் மீது ஒருவர் குறை கூறக் கூடாது எனவும், ஊடகங்கள் முன்பு பேசக் கூடாது’ எனவும், இருவருக்கும் தலைமை செயலர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் ரோகிணி, ரூபா மோதலால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும், அவரவர் வகித்து வரும் பதவிகளில் இருந்து நேற்று அதிரடியாக விடுவிக்கப்பட்டனர்.
இதன்படி, கர்நாடக அறநிலையத் துறை கமிஷனராக பசவராஜேந்திரா நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருந்த ரோகிணி விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ரூபா வகித்து வந்த, கர்நாடக மாநில கைவினை பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் பதவி, பாரதி என்பவருக்கு கொடுக்கப்பட்டது. இவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தலைமை செயலர் வந்திதா சர்மா பிறப்பித்து உள்ளார்.
அரசு விளக்கம்
ரூபாவின் கணவரான மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி முனிஷ் மவுத்கில்லும் துாக்கி அடிக்கப்பட்டார். பெங்களூரில் நில பதிவேடுகள் துறை கமிஷனராக இருந்த அவர், கர்நாடக அரசின் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர்கள் சண்டையில், ரூபாவின் கணவர் எதற்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்ற கேள்வி எழுந்தது. ‘இந்த பணியிட மாற்றம் வழக்கமானது தான்’ என்று, அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
ஆனால், ரோகிணி மீது ரூபா நில முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். நில பதிவேடுகள் துறை கமிஷனராக இருந்த தன் கணவரிடம் இருந்து ரூபா ஏதாவது தகவலை பெற்று இருக்கலாம் என்ற அடிப்படையில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரோகிணியின் கணவர் சுதீர் ரெட்டி, தன் மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக நேற்று முன்தினம் ரூபா மீது, பாகல்குண்டே போலீசில் புகார் செய்தார். இந்த புகார் மீது நேற்று வரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.
இதனால், ரூபா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட கோரி, நீதிமன்றத்தை நாட ரோகிணி தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் போலீசாருக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளன. ரூபாவின் மீது வழக்குப்பதிவு செய்யலாமா; எந்த பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்வது என்று, சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்துகின்றனர்.
ரூ.19 கோடியில் கட்டப்படும் பங்களா
எலஹங்கா செஞ்சுரி ஆர்டிக்கிள் லே – அவுட்டில் ரோகிணி கட்டி வருவதாக கூறி, ஒரு வீட்டின் புகைப்படத்தை ரூபா வெளியிட்டார். அந்த வீடு பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது 4,800 சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. ஒரு சதுர அடியின் விலை, 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி பார்த்தால், அந்த வீட்டின் மதிப்பு 14 கோடி 40 லட்சம் ரூபாயில் இருந்து, 19 கோடியே 20 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.இந்த வீட்டின் மெயின் கதவின் விலை 6 லட்சம் ரூபாய் என்றும், 26 லட்சம் ரூபாய்க்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கப்பட்டு இருப்பதாகவும்; இத்தாலி, ஜெர்மனியில் இருந்து 2 கோடி ரூபாய்க்கு, பர்னிச்சர் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளதாகவும் ரூபா கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்