மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் பாஜகவை தோற்கடிக்க முடியும் – ராகுல் காந்தி கருத்து

புதுடெல்லி: இத்தாலியை சேர்ந்த முன்னணி நாளிதழான கூரியர் டெல்லா சீராவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் பாசிசம் இருக்கிறது. ஜனநாயக அமைப்பு கள் சீர்குலைக்கப்படுகின்றன. அனைத்து அரசு துறைகளிலும்ஆர்எஸ்எஸ் ஊடுருவுகிறது. நாடாளுமன்றம் செயல்படவில்லை. அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசமுடியவில்லை. கருத்து சுதந்திரம்,பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

வறுமை, கல்வியறிவின்மை, பணவீக்கம் உள்ளிட்ட உண்மையான பிரச்சினைகளை பாஜக அரசு மூடி மறைக்கிறது. கரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு குறு, சிறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலமில்லாத விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி இருக்கிறது. இதுபோன்ற உண்மையான பிரச்சினைகளை மறைக்க மத்தியில் ஆளும் பாஜக மத வெறுப்புணர்வை தூண்டி வருகிறது.

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியாக திரண்டால் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவை தோற்கடிக்க முடியும். அமைதி, ஒற்றுமையை விரும்பும் கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும். இதன்மூலம் பாசிசத்தை தோற்கடிக்க முடியும்.

எப்போது திருமணம்?: இந்தியா, சீனா இடையே அமைதியான, ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். தொழில் துறையை பொறுத்தவரை மேற்கத்திய நாடுகளால் சீனாவுடன் போட்டியிட முடியாது. குறிப்பாக குறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்வதில் சீனாவை மேற்கத்திய நாடுகள் முந்துவது கடினம். ஆனால் தொழில் துறையில் இந்தியாவால் சீனாவோடு போட்டியிட முடியும். உக்ரைன் போருக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

நேருவை எனது வழிகாட்டியாக கருதுகிறேன். எதற்கும் அஞ்சாதே, எதையும் மறைக்காதே என்ற அவரது கொள்கையை பின்பற்றுகிறேன். பாட்டி இந்திரா காந்தியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் படுகொலை செய்யப்பட்ட நாளன்று காலையில் என்னை அழைத்தார். நான் உயிரிழந்தால் அழக்கூடாது. குறிப்பாக பொது இடத்தில் அழக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

எனது தந்தை ராஜீவ் காந்தி தனது மரணத்தை முன்கூட்டியே உணர்ந்தார். விடுதலைப் புலிகளால் கொல்லப்படுவோம் என்பது அவருக்கு தெரியுமோ, தெரியாதோ, ஏதோ ஓர் உள்ளுணர்வில் அவர் தனது முடிவை முன்கூட்டியே உணர்ந்தார்.

நான் மரணத்துக்கு அஞ்சவில்லை. காஷ்மீரில் பாத யாத்திரை மேற்கொண்டபோது என்னை அச்சுறுத்த திடீரென பாதுகாப்பை விலக்கிக் கொண்டனர். எவ்வித பாதுகாப்பும் இன்றி பாத யாத்தி ரையை தொடர்ந்தேன்.

நான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது எனக்கே புதிராக இருக்கிறது. நான் இன்னமும் பல்வேறு பணிகளை செய்ய வேண்டியிருக்கிறது. எனினும் குழந்தைகள் வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.