உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்து ஒரு வருடம் நிறைவடைய உள்ள நிலையில், போர் தணியுமென்று பார்த்தால், அதற்கு எதிர்மாறாக, நடக்கும் ஒவ்வொரு செயல்களும், போரை அது இன்னும் வீரியமாக்கும் விதமாகவே இருக்கிறது.
அதற்கு முதற்காரணம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு திடீரென சென்று, `500 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவோம்’ என்று கூறியது. இரண்டாவது காரணம், `உக்ரைனில் நடக்கும் அனைத்துக்கும் முழுக்க மேற்கத்திய நாடுகளே பொறுப்பு. சரியான வழியில் பதிலளிப்போம்’ என புதின் கூறியது.
இப்படி ஒருபக்கம் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க செயல்பட்டால், ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா செயல்படுகிறது என இன்னொருபக்கம் பேசப்படுகிறது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக, ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்கள் வழங்கலாம் என நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் (Jens Stoltenberg) தெரிவித்திருக்கிறார்.
பைடனின் ராணுவ ஆயுத உதவி அறிவிப்பு வெளியானப் பிறகு பேசிய ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், “இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கியவர் அதிபர் புதின். போரை மேலும் தீவிரப்படுத்திக் கொண்டிருப்பவர் புதின். ரஷ்யாவின் இந்த போருக்கு, சீனா தனது உச்சகட்ட ஆதரவை வழங்க திட்டமிட்டிருக்கலாம் என்று கவலைகொண்டுள்ளோம்” என்றார்.