டெல்லி : 6 வயது முடிந்த பிறகே முதல் வகுப்பில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த உத்தரவை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு 3 முதல் 6 வயது வரை மூளை வளரும் பருவம் என்பதால் கல்வி கற்பிப்பதை 6 வயதுக்குப் பின்னரே துவங்க வேண்டும் என்ற ஆய்வறிஞர்களின் பரிந்துரைப்படி, புதிய கல்விக் கொள்கையில் 1-ம் வகுப்பில் சேர 6 வயது பூர்த்தியாகி இருப்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தொலைநோக்குப் பார்வையை எட்ட கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில்,’பள்ளிக் கல்வியில் முதல் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை வயதை 6 க்கு மேல் மாற்றியமைக்க வேண்டும். 3 முதல் 6 வயது வரை மழலையர் பள்ளியில் குழந்தைகளை படிக்க வைப்பதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும், நர்சரி பள்ளிகளில் 2 ஆண்டுகள் டிப்ளமோ படிப்பை மாநிலங்கள் செயல்படுத்த வேண்டும்,’ என்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பாடத்திட்டம், மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் வடிவமைக்கப்பட்டு மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.