* தொழில் வளர்ச்சி முன்னேற்றத்திற்கான ஏற்பாடு
* திட்டத்தை விரைந்து முடிக்க கோரிக்கை
செய்யாறு: திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி பெறவும், ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி ஆகிய சட்டமன்றத் தொகுதி மக்கள் ரயில் வசதி பெறவும், 2006ம் ஆண்டு திண்டிவனம் – நகரி ரயில் பாதைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தொடங்கி ஆந்திர மாநிலம் நகரி இடையே புதிய அகல ரயில் பாதையாக இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. திண்டிவனம் – நகரி இடையே 184.45 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் சுமார் ரூ583 கோடியில் செயல்படுத்தப்படும் என்று 2006 -ல் அப்போது இருந்த மத்திய காங்கிரஸ் அரசு அறிவித்தது. அதன்படி 2007 ம் ஆண்டு ராணிப்பேட்டை பழைய ரயில் நிலையப் பகுதியில் நடைபெற்ற விழாவில் புதிய ரயில் பாதை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், செய்யாற்றின் குறுக்கே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மற்றும் செய்யாறு ரயில் நிலையம் அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவும் நடந்தது. தொடர்ந்து திண்டிவனம்- நகரி புதிய அகல ரயில்பாதை திட்டத்திற்காக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் நில ஆர்ஜித பிரிவு அலுவலகம் செய்யாறில் தொடங்கப்பட்டு 2014ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. நகரி- திண்டிவனம் இடையே புதிய ரயில்பாதைத் திட்டத்திற்காக செய்யாறு கோட்டத்தைச் சேர்ந்த செய்யாறு, வந்தவாசி, ஆரணி ஆகிய வட்டங்களில் இருந்து ஆரணி, செய்யாறு, அனக்காவூர், வந்தவாசி, தெள்ளாறு ஆகிய ஒன்றியப் பகுதிகளில் இருந்து சுமார் 265 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு (புறம்போக்கு நிலங்கள் தவிர்த்து) உள்ளது. தற்போது நிலவரப்படி 90 சதவீதத்திற்கு மேலாக நில ஆர்ஜித பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்தியாவின் முதல் ரயில் மும்பை – தானே இடையே இயக்கப்பட்டது. அதன் பின்னர் தென்னிந்தியாவின் முதல் ரயில், சென்னை ராயபுரம் – வாலாஜா ரோடு இடையே 1856-ம் ஆண்டு இயக்கப்பட்டது. பின்னர் ராணிப்பேட்டை வரையில் பாதை நீட்டிக்கப்பட்டது. ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையின் பொருட்களை எடுத்து செல்வதற்காகவும், பயணிகள் சேவைக்காகவும் ராணிப்பேட்டை ரயில் நிலையம் பயன்பட்டு வந்தது. பின்னர் பல்வேறு காரணங்களுக்காக 1995-ம் ஆண்டு ராணிப்பேட்டை ரயில் நிலையம் பயன்பாடு இல்லாமல் போனது. இதனை அடுத்து ராணிப்பேட்டை ரயில் நிலையத்திற்கும், வாலாஜா ரோடு ரயில் நிலையத்திற்கும் இடையில் இருந்த ரயில்வே தண்டவாளங்களை ஏலம் விட போவதாக தகவல் பரவியது.
இதனையடுத்து ராணிப்பேட்டை, வாலாஜா பகுதிகளில் உள்ள அரசியல் கட்சியினரும், நுகர்வோர் அமைப்பு உள்ளிட்ட சமூக சேவை அமைப்புகளும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி ராணிப்பேட்டை ரயில் நிலையத்தை அகற்றக்கூடாது, மாறாக இந்த ரயில் நிலையம் வழியாக, ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து விழுப்புரம் வரை ரயில்கள் விட வேண்டும். இதன் மூலம் இப்பகுதி மக்கள் பயனடைவார்கள் என்ற கோரிக்கையை ரயில்வே துறைக்கு வைத்தனர். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின் பயனாக, திண்டிவனம் – ஆந்திர மாநிலம் நகரி இடையே ரயில் பாதை தொடங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதுநாள் வரை ரயில் தொடர்பு வசதி இல்லாத செய்யாறு, ஆரணி, வந்தவாசி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா ரோடு மற்றும் சோளிங்கர் டவுன் ஆகிய இடங்கள் வழியாக அமைக்கப்பட உள்ள இந்த புதிய ரயில்பாதை தமிழகத்தின் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக செல்லும் சென்னை எழும்பூர்-விழுப்புரம் ரயில் பிரிவில் உள்ள திண்டிவனம் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம்-ரேணிகுண்டா ரயில் பிரிவில் உள்ள நகரி ரயில் நிலையத்தினை இணைக்கும். இந்த பாதையில் 19 புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.
ஏற்கனவே உள்ள திண்டிவனம், வாலாஜா ரோடு மற்றும் நகரி ரயில் நிலையங்கள் ரயில் சந்திப்புகளாக (ஜங்சன்) செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தொழில் வளர்ச்சியில் பின்தங்கி உள்ள விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக செல்லும் இந்த புதிய ரயில்பாதை இந்த பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவில் ஊக்கமளிக்கும். சாலை போக்குவரத்தினையே நம்பி இருக்கும் இந்த பகுதி மக்களின் முன்னேற்றத்திற்கும் இந்த அகல ரயில்பாதை போக்குவரத்து வழிவகுக்கும். பயணிகள் போக்குவரத்து அதிகம் காணப்படும் இந்த பகுதிகளில் உள்ள அரசு ஊழியர்கள், மாணவர்கள், வணிகர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் ஆகியோருக்கு திண்டிவனம்- நகரி ரயில் போக்குவரத்து ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
இந்த புதிய ரயில்பாதை இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் நீண்டநாள் தேவையினை பூர்த்தி செய்வது மட்டுமல்லாது தொழில் வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களின் மக்களை தேசிய நீரோட்டத்துடன் ஒருங்கிணைக்கும் பாலமாகவும் திகழும். திண்டிவனம்- நகரி ரயில் பாதை திட்டம் தமிழகத்தின் வட மாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் ரயில் போக்குவரத்தில் இணைக்கும் மிகச்சிறந்த திட்டமாகும். இதற்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கிட வேண்டும். நிகழ் ஆண்டில் மத்திய ரயில்வே பட்ஜெட்டில் ₹200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதால் சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு நகரி – திண்டிவனம் ரயில்பாதை திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்று உள்ளதால் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும், புதிய ரயில் பாதை மற்றும் புதிய ரயில் நிலையப் பணிகளை விரைந்து முடித்து ரயில் சேவையைத் தொடங்கிட வேண்டும் என்று இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கையாக உள்ளது. ரயில் சேவையால், இப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைந்து, பொருளாதார வளர்ச்சியும் மேலோங்கும் என்பதே இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து பயணியர் சரக்கு ரயில்கள் விழுப்புரத்தில் இருந்து அரக்கோணம் அல்லது சென்னைக்கு வராமல் நேரடியாக வாலாஜா சாலை நகரி ரேணிகுண்டா வழியாக செல்லலாம் குறிப்பாக மும்பை டெல்லி விரைவு ரயில்களில் பயண நேரத்தை வெகுவாக குறைக்க முடியும்.
திண்டிவனம் நகரில் புதிய ரயில் பாதை திட்டம் தமிழகத்தில் வடமாவட்டங்களை இணைக்கும் முக்கிய திட்டம் இது வட மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனவே வாலாஜா சாலை நகரி வரைக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல் அந்த ஒட்டுமொத்த திட்டத்துக்கும் முக்கியத்துவம் அளித்து உரிய நிதி ஒதுக்கி பணிகளை துரிதப்படுத்த என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
90 சதவீதம் நிலம் எடுப்பு பணிகள் முடிந்தது
நகரி திண்டிவனம் ரயில் பாதை திட்டம் குறித்து நில ஆர்ஜிதப்பணியில் ஈடுபடும் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: நகரி திண்டிவனம் ரயில் பாதை திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட தாலுகாக்களில் நீண்ட காலமாக கிடப்பிலிருந்த நில ஆர்ஜித பணிகள் கடந்த ஓரிரு ஆண்டுகளாக துரித நடவடிக்கை எடுத்துக் கொண்டதன் விளைவாக 90 சதவீதத்திற்கு மேலாக ஆர்ஜித பணிகள் முடிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் நில ஆர்ஜிதப் பணிகள் ஓரளவிற்கு நிறைவடைந்த நிலையில் ரயில்வே துறை நிதி ஒதுக்கீடு செய்ததும் ஓரிரு ஆண்டுக்குள் தண்டவாளமே பார்க்காத செய்யாறு, வந்தவாசியில் விரைவில் ரயில் சேவை தொடங்கப்படும். இவ்வாறு கூறினர்.
ரயில் பாதைகள், பாலங்கள் விவரம்
ரயில்பாதை விவரங்கள்: திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை, தெள்ளாறு, வந்தவாசி, மாம்பாக்கம், எருமைவெட்டி, செய்யாறு, இருங்கூர், மாமண்டூர், தாமரைப்பாக்கம், திமிரி, ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா சாலை சந்திப்பு, கொடைக்கல், சோளிங்கர், ஆர்.கே.பேட்டை, அத்தி, மஞ்சூரிப்பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, நகரி ஆகிய இடங்களில் புதிய ரயில் நிலையங்கள் அமையவுள்ளன. பாலங்கள் விவரம்: புதிய ரயில் பாதையில் 12 பெரிய பாலங்கள், 114 சிறிய பாலங்கள், 66 கடவுப் பாதைகள், 11 மேம்பாலங்கள், 30 தரை வழிப் பாலங்கள் அமையவுள்ளன.
பாழடைந்து வரும் ரயில்நிலையம்
நகரி திண்டிவனம் ரயில்பாதை திட்டத்திற்காக ராணிப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள ரயில்நிலையம் பாழடைந்துள்ளது. அதேபோல் ரயில்வே பொருட்களும் சிலவற்றை சமூகவிரோதிகள் திருடிச்சென்றுள்ளனர். இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது. தற்போது இத்திட்டம் புத்துயிர் பெற்றுள்ளதால், இந்த நிலை மாறும் என்று மக்கள் நம்பிக்ைகயில் உள்ளனர்.