அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அந்தக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அ.தி.மு.க எடப்பாடி தரப்பு தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கௌரவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை. பாண்டவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். அந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பின் மூலம் வெற்றி பெற்றிருக்கிறோம்.
நாங்கள் அனைத்தையும் சட்டபூர்வமாகவே எதிர்கொண்டு செயல்படுத்தி வருகிறோம். இந்தத் தீர்ப்பு ஈரோடு சட்டமன்றத் தேர்தலில் பிரதிபலிக்குமா என்பதைத் தாண்டி, ஏற்கெனவே மக்களுக்கு தி.மு.க-வின்மீது இருக்கக்கூடிய அதிருப்திகள் மற்றும் ஆளும் அரசின் நடவடிக்கைகளால் எங்களது, ஆட்சியின் திட்டங்களை மக்கள் நினைத்துப் பார்க்கிறார்கள். அதனால், எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் இவர்களைத் தவிர, அவர்களைச் சார்ந்தவர்கள் யார் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி அரவணைத்து ஏற்றுக்கொள்வார்.
ஏனென்றால் எங்களுக்கு அவர்களைச் சார்ந்தவர்கள் பிரதான எதிரிகளல்ல. அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு அடியாட்களோடு வந்து, எம்.ஜி.ஆர் மாளிகையை எட்டி உதைத்து, பொருள்களைக் கொள்ளையடித்து, ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு எதிராகச் செயல்பட்ட ஒருவரை எந்த தொண்டரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கருணாநிதியைப் புகழ்ந்து தி.மு.க-வின் பி-டீமாக இருக்கும் ஒருவரை, கட்சித் தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்… இனி ஓ.பி.எஸ்ஸின்-ன் அரசியல் வாழ்க்கை ஜீரோதான். ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் இல்லாமல் அ.தி.மு.க இனியும் நூறாண்டுகள் தொடரும்” எனத் தெரிவித்தார்.