ஈரோடு: “ஜனநாயக முறையில்‌ தேர்தலை நடத்த முடியவில்லை என்றால்‌ தேர்தல்‌ எதற்கு?" – விஜயகாந்த் கேள்வி!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பிப்ரவரி 27-ல் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கான தேர்தல் பிரசாரங்களில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. அதேசமயம், தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் வாக்காளர்களுக்கு பொருள்கள் உட்பட பணப்பட்டுவாடா செய்துவருவதாக நாம் தமிழர், தே.மு.தி.க போன்ற கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ஈரோடு இடைத்தேர்தல்

இந்த நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தேர்தல் விதிமீறல்களைத் தடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாகவும், ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் தேர்தல் எதற்கு என்றும் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் விஜயகாந்த், “ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில்‌ பல்வேறு விதிமீறல்கள்‌ நடைபெற்று வருகின்றன. ஆளுங்கட்சியும்‌, எதிர்க்கட்சியும்‌ போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும்‌ பல்வேறு இலவச பொருள்களை வழங்கி வருகின்றனர்‌. கும்பல்‌ கும்பலாக மக்களைப் பட்டறையில்‌ அடைத்து வைப்பது, வாக்காளர்களுக்குப் பணம்‌ கொடுப்பதைச் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள்‌மீது தாக்குதல்‌ நடத்துவது, பணப்பட்டுவாடா குறித்து கருத்து தெரிவிக்கும்‌ மாற்றுக் கட்சியினர்‌மீது ரௌடி கும்பலை வைத்து தாக்குதல்‌ நடத்துவது போன்ற பல்வேறு அராஜக செயல்கள்‌ ஈரோடு கிழக்குத் தொகுதியில்‌ நடைபெற்று வருகின்றன.

விஜயகாந்த்

தேர்தல்‌ விதிமீறல்களைத் தடுக்காமல்‌ பறக்கும்‌ படையினரும்‌, தேர்தல்‌ அதிகாரிகளும்‌ வேடிக்கை பார்த்து வருகின்றனர்‌. நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல்‌ அதிகாரிகள்‌ ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவது எந்த வகையில்‌ நியாயம்‌. பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக, வீடியோ ஆதாரத்துடன்‌ தமிழக தலைமைத் தேர்தல்‌ அதிகாரியிடம்‌ தே.மு.தி.க மனு அளித்திருக்கிறது. அதேபோல்‌ மேலும்‌ பல்வேறு கட்சிகளும்‌ புகார்‌ அளித்திருக்கும்‌ நிலையில்‌, ஈரோடு கிழக்குத் தொகுதியில்‌ நடைபெறும்‌ தேர்தல்‌ விதிமீறல்களைத் தடுக்க அதிகாரிகள்‌ இதுவரை எந்தவித நடவடிக்கையும்‌ எடுக்கவில்லை.

விஜயகாந்த் அறிக்கை

இதுபோன்ற சம்பவங்களைப் பார்க்கும்‌போது பணநாயகமே ஜனநாயகமாகிவிட்டதோ என்று தோன்றுகிறது. பணத்தை பிரதானப்படுத்தி மக்களைச் சந்திப்பது சரிதானா… ஜனநாயக முறையில்‌ தேர்தலை நடத்த முடியவில்லை என்றால்‌ இங்கு தேர்தல்‌ எதற்கு… தேர்தல்‌ அதிகாரிகள்‌ எதற்கு… நேரடியாக ஆளுங்கட்சியே வென்றுவிட்டதாக அறிவிக்க வேண்டியதுதானே. இங்கு நியாயமான முறையில்‌ பிரசாரம்‌ செய்யும்‌ கட்சிகளின்‌ நிலை என்ன… இனியாவது ஜனநாயக முறையில்‌ தேர்தலை நடத்த தேர்தல்‌ அதிகாரிகள்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. ஓட்டுக்குப் பணம்‌ பெறுவதை மக்களும்‌ தவிர்க்க வேண்டும்‌” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.