சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மதுரையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திதார். அப்போது பேசிய அவர்,” உச்ச நீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளது. சட்டப் போராட்டம் மூலம் அதிமுகவுக்கு முழு வெற்றி கிடைத்துள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற அற்புதமான தீர்ப்பு கிடைத்துள்ளது. அதிமுக நிர்வாகிகள் கூடி விரைவில் பொதுச் செயலாளர் தேர்வு நடக்கும். ஒரு சிலரைத் தவிர யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வோம்.
இனி அதிமுகவுக்கும் ஓபிஎஸ்.,ஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கி போய்விட்டார். இரட்டை இலை சின்னம் குறித்து பேச அவருக்கு தகுதி இல்லை. ஆட்சி நீடிக்குமா? என்ற கணிப்புகளை பொய்யாக்கி 4 ஆண்டு 2 மாதங்கள் பொற்கால ஆட்சி கொடுத்தேன். எதிர்காலத்தில் அதிமுக தான் ஆட்சி அமைக்கும். தொண்டர்களின் பொதுச் செயலாளர் நான்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நாள் உள்ளது. திமுக கூட்டணிக்கு பயம் வந்துவிட்டது. இதனால் தான் வாக்காளர்களை அடைத்து வைக்கின்றனர். இதுவே எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. அதிமுக வலுவாக உள்ளது. இனிமேல் அனைவரும் எங்கள் பக்கம் வருவார்கள். சிறப்பாக பணியாற்றி, மீண்டும் நல் ஆட்சியை கொடுப்போம்.” இவ்வாறு அவர் கூறினார்.