திருச்சுழி: திருச்சுழி பகுதியில் பல்வேறு ஊராட்சிகளில் காட்சிப்பொருளாக உள்ள சின்டெக்ஸ் தொட்டிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழி ஒன்றியங்களில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு மழை பொய்த்ததால் பல்வேறு கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் காலிக்குடங்களுடன் அருகில் உள்ள குண்டாற்றில் குழி தோண்டி நீர் எடுத்து வந்தனர். மேலும் பல கிராமங்களில் ஒரு குடம் தண்ணீர் பத்து ரூபாய்க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்தனர்.
தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க திருச்சுழி ஒன்றியங்களில் அனைத்து கிராமங்களிலும் கடந்த அதிமுக ஆட்சியில் மினி விசைப்பம்பு, தொட்டிகள் அமைக்கப்பட்டன. இதற்காக ஒவ்வொரு தொட்டிக்கும் சுமார் ரூ.ஒரு லட்சத்து 40 ஆயிரம் வரை நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தன. இதன்படி புதிதாக போர்வெல் அமைக்கப்பட்டு மின் மோட்டார் மூலம் தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு அருகில் குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. பெரும்பான்மையானவற்றில் ஒரு சில மாதங்கள் மட்டுமே தண்ணீர் வந்தது. சில ஊராட்சிகளில் குழாய் அமைத்ததிலிருந்தே தண்ணீர் வரவில்லை.
பெரும்பாலான தொட்டிகள் காட்சிப்பொருளாகவே உள்ளன. இவற்றிற்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணாகிவிட்டது. மோட்டார் பிரச்சனை, முறையான மின் இணைப்பு இல்லாதது என பல்வேறு பிரச்சனைகளால் இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட தொட்டிகள் பல செயல்பாடின்றி கிடக்கின்றன. சில ஊராட்சிகளில் முறையாக கட்டப்படாமல் நிதியை வீணடித்துள்ளனர். மீண்டும் தொட்டிகளை சீரமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து பண்ணைமூன்றடைப்பை சேர்ந்த சுரேஷ் கூறுகையில், ‘‘மாவட்டத்தில் கோடைகாலத்தில் அதிகளவில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதால் இதனை சமாளிக்க ஒவ்வொரு ஊராட்சிகளிலும் மினி பவர் பம்ப் தொட்டிகள் அமைத்தும், அடி பம்புகள் மூலமாகவும் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென அப்போதைய அரசு நிதி ஒதுக்கி, அந்தந்த பகுதியில் உள்ள அதிமுக கட்சிக்காரர்களிடம் பணிகள் வழங்கப்பட்டன. இதனை பயன்படுத்தி சில அரசியல்வாதிகள் முறையாக பணிகள் செய்யவில்லை. இதனால் அடி பம்புகளும், மினி பவர் தொட்டிகளும் நீரின்றி காட்சிப் பொருளாகவே ஏராளமான ஊராட்சிகளில் உள்ளன. குடிநீர் தட்டுப்பாடின்றி கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்தில் கொண்டுவந்த இத்திட்டம் வீணானது.
இதன் விளைவாக அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும் இருக்கின்ற சின்டெக்ஸ் தொட்டிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். சமூக ஆர்வலர் ஜோயல் கூறுகையில், திருச்சுழி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் எந்த சிரமமும் இன்றி தண்ணீர் பிடித்து வந்தனர். நாளடைவில் சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்து விட்டது. இதனால் தண்ணீர் நிரப்ப வழியில்லை. தொட்டியை சுற்றிலும் செடிகள் முளைத்து புதர்மண்டி காணப்படுகிறது.
பொது மக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது கோடைகாலம் நெருங்கிவிட்ட நிலையில் கண்மாய் மற்றும் குளங்களில் தண்ணீர் வற்றியதால் பெரும்பாலும் சின்டெக்ஸ் தொட்டியில் வருகின்ற தண்ணீரை கால்நடைகளுக்கு பயன்படுத்துவது வழக்கம். விரைவில் சின்டெக்ஸ் தொட்டிகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றார்.