தெஹ்ரான்: பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை தாக்கிய இளைஞருக்கு நிலம் நன்கொடையாக வழங்கப்படும் என்று ஈரானைச் சேர்ந்த அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஈரான் இமாம் கொமெய்னி ஃபத்வா அறக்கட்டளையின் செயலாளர் முகமது இஸ்மாயில் பேசும்போது, “சல்மான் ருஷ்டியின் ஒரு கை மற்றும் கண்களை செயலிழக்கச் செய்து முஸ்லிம்களை மகிழ்வித்த அந்த அமெரிக்க இளைஞனுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ருஷ்டி வாழும்போதே இறந்துவிட்டார். இந்த துணிச்சலான செயலை கவுரவிக்கும் வகையில், சுமார் 1,000 சதுர மீட்டர் விவசாய நிலம் அந்த நபருக்கோ அல்லது அவரது சட்டபூர்வமான பிரதிநிதிகளுக்கோ நன்கொடையாக வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மும்பை நகரில் பிறந்தவர் அகமது சல்மான் ருஷ்டி. பின்னாளில் அவரது குடும்பம் பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்தது. ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ படைப்புக்காக புக்கர் பரிசை வென்றவர். 1988-ல் வெளிவந்த இவரது ‘தி சாட்டனிக் வெர்சஸ்’ படைப்பு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகம் முழுவதுமே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தப் புத்தகம் இன்றளவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதில், ஈரான் சல்மான் ருஷ்டி தலைக்கு விலையும் நிர்ணயித்தது. இதன் காரணமாக சல்மான் ருஷ்டி தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் நடந்த நிகழ்வு ஒன்றில் சல்மான் ருஷ்டி கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் சல்மானின் கை நரம்பு, கழுத்து, நெஞ்சு, கல்லீரல் ஆகிய உறுப்புகளில் காயம் ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் சல்மான் ருஷ்டி ஒரு கண்ணில் பார்வையை இழந்தார்.
தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர் ஹாதி மட்டர் (24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சல்மான் ருஷ்டி மீதான இந்தத் தாக்குதலை எழுத்தாளர்கள் பலரும் கண்டித்தனர். இந்த நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு பத்திரிகைகளுக்கு சல்மான் ருஷ்டி சமீபத்தில் நேர்காணல்களை அளித்திருந்தார். இந்தச் சூழலில் இம்மாதிரியான அறிக்கை ஈரானிலிருந்து வெளியாகி உள்ளது.