பஞ்சாப் மாநிலம், பதிண்டா கிராமப்புற தொகுதியின் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் அமித் ரத்தன் கோட்பட்டா. ரஷிம் கார்க் என்பவர் எம்.எல்.ஏ-வின் நெருங்கிய உதவியாளர் ஆவார். இவர் அரசு மானியமாக வழங்கும் ரூ. 25 லட்சம் பணத்தை வழங்குவதற்கு, ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக பதிண்டாவில் உள்ள குடா கிராமத் தலைவரின் கணவர் புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 16 அன்று உதவியாளர் ரஷிம் கார்க், 4 லட்சம் ரொக்கத்துடன் கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ அமித் ரத்தன் கோட்பட்டாவுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டது. இதையடுத்து, ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்ட வழக்கில், பஞ்சாப் விஜிலென்ஸ் பீரோவால் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ நேற்று மாலை கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நீதிமன்ற காவலில் வைக்க இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரியவந்திருக்கிறது.
ரஷிம் கார்க் உடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமித் ரத்தன் கோட்பட்டா முன்பு மறுத்தார். பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.