பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை

கேப்டவுன்,

8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

‘ஏ’ பிரிவில் நியூசிலாந்து (4 புள்ளி) 3-வது இடமும், இலங்கை (4 புள்ளி) 4-வது இடமும், வங்காளதேசம் (0) கடைசி இடமும், ‘பி’ பிரிவில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் (4 புள்ளி) 3-வது இடமும், பாகிஸ்தான் (2 புள்ளி) 4-வது இடமும், அயர்லாந்து (0) கடைசி இடமும் பெற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின. நேற்று ஓய்வு நாளாகும்.

இந்த நிலையில் கேப்டவுனில் இன்று (வியாழக்கிழமை) அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. எல்லா உலகக் கோப்பை போட்டியிலும் அரைஇறுதிக்கு முன்னேறிய ஒரே அணியான ஆஸ்திரேலியாவுக்கு பேட்டிங்கில் அலிசா ஹீலி, கேப்டன் மெக் லானிங், பெத் மூனி, தாலியா மெக்ராத்தும், பந்து வீச்சில் மேகன் ஸ்கட், ஆஷ்லி கார்ட்னெர், ஜார்ஜியா வார்ஹாமும் வலு சேர்க்கிறார்கள்.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்து அணிகளை வென்றது. இங்கிலாந்திடம் தோற்றதால் தனது பிரிவில் 2-வது இடத்தை பிடித்த இந்திய அணி 5-வது முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

இந்திய அணியில் பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா, ரிச்சா கோஷ், ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், பந்து வீச்சில் ரேணுகா சிங், ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா ஆகியோரும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். ஆனால் ஹர்மன் பிரீத், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுவது இந்திய அணிக்கு சறுக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது.

20 ஓவர் சர்வதேச போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 22-ல் ஆஸ்திரேலியாவும், 7-ல் இந்தியாவும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. 20 ஓவர் உலகக் கோப்பையில் இரு அணிகளும் 5 முறை சந்தித்ததில் ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டத்திலும், இந்தியா 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றதும் இதில் அடங்கும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.