மதுரை மாவட்டத்தில் உள்ள ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் பாண்டியன். ஓவிய ஆசிரியரான இவர் அஞ்சல் அட்டையை மக்கள் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அஞ்சல் அட்டைகளில் திருவிளையாடல் புராண ஓவியங்களை வரைந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சல் அட்டைகள் மக்களின் தொலை தொடர்பு சாதனமாக பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் அனைவரும் தகவல்களை பரிமாறி கொண்டனர்.
அதுமட்டுமல்லாமல், மக்கள் தங்களது படைப்புகளையும் அஞ்சல் அட்டைகளில் அனுப்பும் வழக்கத்தை வைத்துள்ளனர். ஆனால், தற்போது நவீன தொழில் நுட்பம் காரணமாக அனைத்தும் கணினி மயமாகி காகிதம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் தகவல் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.
அதனால், மக்கள் மீண்டும் அஞ்சல் அட்டைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அஞ்சல் அட்டைகளில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை குறிக்கும் வகையில் படங்களை வரைந்துள்ளேன்.
இதைத் தொடர்ந்து பல்வேறு நூல்களில் இடம் பெற்றுள்ள அரிய கருத்துக்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அஞ்சல் அட்டையில் ஓவியமாக வரைய உள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.