சூப்பர் ஹிட் திரைப்படங்களைத் தாண்டி பரவலாக அறியப்படாத, சர்வதேச அளவில் விருது வாங்கிய தமிழ்த் திரைப்படங்களைப் பற்றியும் விகடன் வாசகர்கள் நிச்சயம் அறிந்து கொள்ள அல்லது மீள் நினைவு செய்ய விரும்புவார்கள் என்கிற உறுதியான நம்பிக்கையில் இந்தப் படத்தைப் பற்றி எழுதுகிறேன்.
சிறுவர்கள் நடித்திருந்தால் மட்டுமே அது அவர்களைப் பற்றிய படமாகி விடாது. அது சிறார்களைப் பற்றிய உள்ளடக்கத்துடன் இருக்க வேண்டும். அவர்களின் மொழியில், கோணத்தில், பார்வையில் அவர்களின் உலகினை சித்திரிப்பதாக இருக்க வேண்டும். இதைத்தான் சந்தோஷ் சிவன் இயக்கிய ‘மல்லி’ திரைப்படம் அழகாக மெய்ப்பிக்கிறது.
கேமராவில் கவிதை எழுதும் கலைஞன் – சந்தோஷ் சிவன்
இந்திய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் மதிக்கப்படும் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களுள் ஒருவர் சந்தோஷ் சிவன். ஆசிய கண்டத்திலேயே ‘American Society of Cinematographers’ அமைப்பில் உறுப்பினராக ஆகும் தகுதியை அடைந்தவர் இவர் மட்டுமே. ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்திற்காக, தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ள இவர், ஐம்பத்தைந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு தரமான ஒளிப்பதிவைத் தந்துள்ளார். நாற்பதுக்கும் மேற்பட்ட ஆவணத் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். Halo (1996), The Terrorist (1998), அசோகா (2001), நவரசா (2005), Tahaan (2008) என்று பல்வேறு மொழிகளில் இவர் இயக்கிய திரைப்படங்கள், விமர்சன ரீதியான கவனத்தைப் பெற்றுள்ளதோடு பல விருதுகளையும் குவித்துள்ளன.
இந்த வரிசையில், 1998-ல் வெளியான ‘மல்லி’ என்கிற தமிழ்த் திரைப்படத்தைப் பற்றித்தான் இந்த வாரம் பார்க்கப் போகிறோம். இது ஒரு சிறுமியின் களங்கமில்லாத உலகத்தைப் பற்றியும் உள்ளத்தையும் பற்றியுமான படம்.
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மல்லி என்கிற சிறுமி, பள்ளி விடுமுறையில் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று அங்குள்ள குளம், மான்குட்டி, பூக்கள் போன்றவற்றிடம் பேசிக் கொண்டிருப்பாள். நகரத்திலிருந்து வந்திருக்கும் வனஅலுவலரின் மகளான ‘குக்கு’ என்கிற சிறுமி, மல்லிக்குத் தோழியாகிறாள். இருவரும் காட்டுப்பகுதிக்குள் மான்குட்டிகளாக ஓடியாடி விளையாடிக் களிக்கிறார்கள்.
மல்லிக்கு இரண்டு பெரிய ஆசைகள் உண்டு. ஒன்று, வருகிற திருவிழாவிற்கு பாவாடை, தாவணி அணிய வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும் என்று அவள் விவரிப்பதே அத்தனை அழகு. “உன்னிப்பூ நிறத்தில் ஜாக்கெட், புல் நிறத்தில் பச்சைப் பாவாடை, அதில் மானுக்கு இருப்பது போன்ற புள்ளிகள், ஆகாச நிறத்தில் நீலநிற தாவணி” என்று ஆசையாக ஆசையாக தன் கனவு உடையைப் பற்றி சொல்வாள். இரண்டாவது ஆசை, நீலக்கல். ஆம், கதை சொல்லும் பாட்டி சொல்லியிருக்கிறாள். மாயசக்தியுள்ள நீலக்கல்லைப் பற்றி. அதை மாத்திரம் எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து விட்டால் ‘வாய் பேச முடியாத’ தோழியான குக்கு பேச ஆரம்பித்து விடுவாள்.
மல்லியின் இந்த இரண்டு ஆசைகளும் நிறைவேறினவா? இரண்டு சிறுமிகளின் உலகத்தை சிறார்களின் பிரத்யேக மொழியில், கவிதையான தருணங்களால் காட்சிப்படுத்தியிருக்கிறார் சந்தோஷ் சிவன்.
‘மல்லி’யாக படம் முழுவதும் அசத்தியிருக்கும் ஸ்வேதா
சிறுமி மல்லியாக ஸ்வேதா. இதுதான் அவருடைய அறிமுகப்படம். இந்தக் கதாபாத்திரத்தையும் சரி, ஒட்டுமொத்த படத்தையும் சரி, ஒற்றை ஆளாக தாங்குவது ஸ்வேதாதான். எந்தவொரு திறமையான நடிகருக்கும் சவால் விடும்படியாக, ஆவல், அழுகை, மகிழ்ச்சி, நிராசை, கவலை, சிரிப்பு, தனிமை என்று விதம் விதமான முகபாவங்களை, உணர்ச்சிகளை நடிப்பில் காட்டி அசத்தியிருக்கிறார். இயக்குநர் சொன்னதை சரியாகப் பின்பற்றி தேசிய விருதுக்கு முழு நியாயம் செய்திருக்கிறார். ஆம், 1999-ம் ஆண்டின் ‘சிறந்த குழந்தை நடிகருக்கான’ தேசிய விருது ஸ்வேதாவிற்கு கிடைத்தது. ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய சிறந்த திரைப்படம்’ என்கிற பிரிவிலும் இந்தப் படம் தேசிய விருதுக்குத் தேர்வானது.
முயல்குட்டி போல முன்னால் தூக்கிற நிற்கிற இரண்டு பெரிய பற்கள், படிய வாரிய சிகை, பழங்குடியினர் பாணியில் ஒற்றைத்துணியை மடித்து உடம்பில் கட்டியிருக்கிற லாகவம், கனவு போல் விரியும் வசீகரமான விழிகள் என்று ‘மல்லி’ பாத்திரத்தில் கச்சிதமாக ஒட்டிக் கொண்டிருக்கிறார் ஸ்வேதா. காட்டில் உயிரினங்களிடம் தனியாகப் பேசிக் கொண்டு உலவுவது, முறைத்துக் கொண்டிருக்கும் நகரத்துத் தோழியிடம் பாட்டுப்பாடி ஒழுங்கு காட்டுவது, பிறகு சிநேகிதியாயவது, அவளது பிரிவிற்கு வருந்துவது, ‘லெட்டர் மாமா’விடம் தனது அப்பா பற்றித் தொடர்ந்து கேட்டு இம்சிப்பது, சித்தியைக் கண்டவுடன் உடல் விறைத்து நிற்பது, கர்ப்பிணி அம்மாவின் வயிற்றில் காது வைத்து கொஞ்சுவது… என்று அந்தக் காட்டைப் போலவே படம் பூராவும் வியாபித்திருப்பவர் ஸ்வேதா.
ஸ்வேதாவின் தோழி ‘குக்கு’வாக நடித்திருப்பவர் வனிதா. இவருக்கும் இதுதான் அறிமுகப்படம். மல்லியை அடிக்க வரும் வாட்ச்மேனிடம் மல்லுக்கட்டுவது. தனது தோழியுடன் காட்டில் அலைவது, வீட்டை விட்டு அவ்வப்போது ஓடிவிடுவதால் கோபித்துக் கொள்ளும் தந்தையை புன்னகையால் சமாளிப்பது என்று வாய் பேச முடியாத சிறுமியாக அற்புதமாக நடித்திருக்கிறார்.
விலங்கு வைத்தியராக ஜனகராஜ். இண்டர்வியூ எடுக்க வரும் பத்திரிகைப் பெண்மணியிடம் தன் பின்னணியைச் சொல்வது, கண்கள் விரிய ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கும் மல்லியைத் துரத்துவது, கடைசியில் அவளுடைய நற்குணத்தைப் புரிந்து கொண்டு “பெரியவங்க சைலண்ட்டா செய்யற தப்பு நமக்குத் தெரியறதில்ல. குழந்தைங்க நல்லது செய்தாலும் நமக்குப் புரியறதில்ல” என்று கலங்கி தனது குணச்சித்திர நடிப்பை வழங்கியிருக்கிறார். இவருக்கு உதவியாளராக நடித்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? பின்னாளில் இயக்குநராக மாறிய விஷ்ணுவர்தன்.
காடும் அதன் கவிதைக் கணங்களும்
சந்தோஷ் சிவன் அடிப்படையில் ஒளிப்பதிவாளர் என்பதால் படம் முழுவதும் கவிதையான காட்சிகளால் நிரப்பி வைத்திருக்கிறார். ஒவ்வொரு பிரேமையும் புகைப்படமாக சட்டம் போட்டு மாட்டிவிடலாம் போல அத்தனை அழகு. காட்டின் அத்தனை அழகையும் தன் கேமராவில் அள்ளியுள்ளார். ஆனால் வெறும் அழகியலுடன் நின்றுவிடாமல் கூடவே ஆழமான செய்தியையும் உறுத்தாமல் சொல்லியிருக்கிறார். வனத்தின் பாதுகாவலர்களும் காட்டின் நண்பர்களும் பழங்குடி மக்கள்தான். அவர்கள்தான் காட்டின் பூர்வகுடிகள். ஆனால் நவீனமயமாக்கல் என்கிற பெயரில் அவர்களைத் துரத்தி விட்டு இயற்கை வளம் தொடர்ந்து அழிக்கப்படுகிறது, ஆக்கிரமிக்கப்படுகிறது.
வேட்டைக்காரர்கள் மிருகத்தைக் கொன்று கழுவிய குளம் ரத்தத்தால் மினுமினுக்கிறது. இதைப் பார்த்து பதறிப் போகும் மல்லி, கதைப்பாட்டியிடம் சொல்ல, அவர் சொல்லும் ஆலோசனையின் படியாக பனித்துளிகளை சேர்த்து சேர்த்து குளத்தில் கொட்டும் காட்சி அழகானது. ‘மயில் கடவுளால்தான் நீலக்கல்லை அருள முடியும்’ என்று பாட்டி கூறுகிறார். பொதுவாக அங்கு செல்ல யாருமே பயப்படுவார்கள். ஆனால் தன் தோழிக்காக செல்கிறாள் மல்லி. சில மயில் தோகைகளை மட்டும் க்ளோசப்பில் காட்டி அமானுஷ்ய உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
எத்தனையோ படங்களில் சாமி தரிசனம் தருவதைப் பார்த்திருப்போம். ஆனால் இதில் ‘மயில் கடவுள்’ வருகிற காட்சி அத்தனைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பார்க்கவே ஆசையாகவும் இருக்கிறது. அதே சமயத்தில் சற்று பயமாகவும் இருக்கிறது. இத்தனைக்கும் காட்சிகளில் அதிக ஆடம்பரமில்லை. படம் முழுவதும் பொங்கி வழியும் இந்த ‘மினிமலிச’ அழகு மனதை அள்ளுகிறது. குறைந்த பிராப்பர்ட்டிகளை வைத்துக் கொண்டு மறக்க முடியாத அனுபவத்தைத் தந்து விடுகிறார் இயக்குநர்.
காட்டின் உண்மையான நண்பர்கள் பழங்குடிகளே!
வனக்கொள்ளையர்கள் மயில் மரத்தை வெட்ட முயல்வதும், அதன் மீது ‘குக்கு’ அமர்ந்திருப்பதும், இதைப் பார்த்து பதறும் மல்லி, வனக்காவலர்களை அழைத்து வந்து குக்குவையும் மரத்தையும் காப்பாற்றும் காட்சி சிறப்பானது. “மனுஷன் இயற்கையை அழிச்சு பாவத்தைச் சம்பாதிக்கறான்” என்று கதைப்பாட்டி சொல்வது உண்மை. நம் மூதாதையரின் போலவே பாட்டியின் குரல் அவ்வப்போது எச்சரிக்கையுடன் ஒலிக்கிறது. இவர் சொல்லும் மயில் கதையும் அத்தனை அழகு.
தனது திருவிழா ஆடை குறித்து தொடர்ந்து கனவு காணும் மல்லி, “எங்க அப்பாக்கு இதை எழுதுங்க” என்று ‘லெட்டர் மாமா’வை அடிக்கடி நச்சரிப்பதும், அவர் எழுதாமல் விட்டு விடுவதை பிறகு அறிந்து “ஏன் எழுதாம போயிட்டாரு” என்று வருந்துவதும், அதற்குப் பிறகு மல்லிக்குக் கிடைக்கும் இன்ப அதிர்ச்சியும் ஓர் அழகான சிறுகதையைப் போலவே அமைந்திருக்கிறது. அத்தனை ஆசைப்பட்டுப் பெற்ற கனவு உடையை அவள் தியாகம் செய்யும் காட்சி, குழந்தைகளுக்கே உரிய களங்கமற்ற தன்மையைக் காட்டுகிறது. ‘லெட்டர் மாமா’வாக வருகிறவரின் நடிப்பு மிக இயல்பாக இருக்கிறது. “இந்தக் காட்டை விட்டு எப்படியாவது டிரான்ஸ்பர் வாங்கிடணும்” என்பதே அவரது தொடர் புலம்பலாக இருக்கிறது. மல்லிக்கும் இவருக்குமான நட்பு அத்தனை சிறப்பாகக் காட்சியாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் சித்திரிக்கப்படும் அழகான வனப்பகுதி, மசினகுடியில் படமாக்கப்பட்டிருக்கிறது. விலங்குகளின் உடல்மொழியை காட்சிகளுக்கு ஏற்ப பொருத்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள். “குளத்தக்கா… உன் பேரைச் சொல்லு” என்று மல்லி கேட்டதும் அதிர்வலைகளின் மூலம் குளம் பதில் சொல்லும் ஆரம்பக் காட்சியே அத்தனை அழகு. உற்சாகம் வந்துவிட்டால், ‘ஒய ஒய ஒய ஒய ஓ…’ என்று கத்திக் கொண்டே துள்ளிக் குதித்து ஓடுவது மல்லியின் பழக்கம். இதை எதிரொலிப்பது போல் படம் பூராவும் ஒலிக்கும் ஆங்காரமான சத்தம் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் சரி, பாடல்களிலும் சரி, அஸ்லம் முஸ்தபா ரசிக்க வைத்திருக்கிறார்.
ஒரு நாட்டுப்புறக்கதையின் எளிமையையும் ஒரு ஃபேன்டஸி கதையின் வசீகரத்தையும் கொண்டுள்ள இந்தத் திரைப்படம், சர்வதேச அரங்குகளில் மிகுந்த வரவேற்பையும் விருதுகளையும் பெற்றது. தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் ‘சிறார் திரைப்பட விழா’ என்கிற பெயரில் ஒவ்வொரு மாதமும் குழந்தைகளுக்கான படத்தை ஒளிபரப்புகிறார்கள். இந்த வரிசையில் 2023, பிப்ரவரி மாதம் ஒளிபரப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படம் ‘மல்லி’.
தன் அன்னையை நேசிப்பது போலவே இயற்கையையும் நிபந்தனையில்லாத அன்புடன் நேசிக்க வேண்டும் என்கிற செய்தியை ஒரு சிறுமியின் களங்கமில்லா உலகத்தின் வழியாகச் சொல்லும் இந்தத் திரைப்படத்தை, அனைத்துக் குழந்தைகளும் பெரியவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டும்.