புதுடில்லி: டில்லி மாநகராட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் பா.ஜ.,கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மாநகராட்சி கூட்டத்தை நடத்தியே தீருவோம் என ஆம்ஆத்மியினர் எம்சிடி ஹவுசில் விடியவிடிய காத்திருந்தனர்.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மூன்று மாநகராட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அதற்கு டிச., 4ல் தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள, 250 வார்டுகளில், ஆம் ஆத்மி,134 இடங்களில் வென்றது.
தொடர்ந்து, 14ஆண்டுகளாக மாநகராட்சியை தன் வசம் வைத்திருந்த பா.ஜ., 1௦4 இடங்களில் வென்றது. காங்கிரஸ் ஒன்பது இடங்களில் வென்றது.
இதையடுத்து மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., இடையே ஏற்பட்ட மோதல்களால் மூன்று முறை இந்தத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இரண்டரை மாதங்கள் முடிந்துள்ள நிலையில், நேற்று(பிப்.,22) மேயர் தேர்தல் ஒரு வழியாக நடந்தது. இதில், ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய், 34 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். இதனால் டில்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் நீடித்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.
இந்த சூழலில் நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நேற்று(பிப்.,22) இரவு நடந்தது. இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு இருந்ததால் பா.ஜ., கவுன்சிலர்கள் தேர்தலை நடத்தவிடாமல் அமளி செய்தனர். இதனால் ஆம் ஆத்மி, பா.ஜ., இடையே மோதல் ஏற்பட்டது. அங்கிருந்த காகிதங்களை சுருட்டியும், தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்தும் ஒருவரை ஒருவர் தாக்கி அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஒரு மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. பெண் உறுப்பினர்கள் தலைமுடியை பிடித்து, இழுத்தும், ஒருவரை ஒருவர் தள்ளி விடவும் செய்தனர். ஆண் உறுப்பினர்கள் அவையில் கோஷங்களை எழுப்பினர். இந்த தொடர் அமளியால் நேற்றிரவு 5வது முறையாக அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், டில்லி மாநகராட்சி அவை போர்க்களம் போன்று காட்சியளித்தது.
டில்லி மாநகராட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி, பா.ஜ., . இடையே மோதல் ஏற்பட்டதால் மாநகராட்சி கூட்டத்தை நடத்தியே தீருவோம் என ஆம்ஆத்மியினர் எம்சிடி ஹவுசில் விடியவிடிய காத்திருந்தனர். சலசலப்பைத் தொடர்ந்து, மாநகராட்சி கூட்டம் நாளை(பிப்.,24) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பா.ஜ., மீண்டும் தோல்விக்கு அஞ்சுகிறது என ஆம் ஆத்மியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்