புதுடெல்லி: அதானி குழும விவகாரங்கள் குறித்த செய்திகளை வெளியிட ஊடங்களுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. அதானி குழும நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹிண்டன்பர்க் அறிக்கையை அடுத்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், இது குறித்து செய்திகளை வெளியிட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வக்கீலான எம்.எல்.சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில், அதானி குழுமம் குறித்து ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு எதிராக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் குழு அமைக்கப்படும் வரை ஊடக செய்திகளை தடை செய்ய வேண்டும். இதுபோன்ற செய்திகளால் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பிஎஸ்.நரசிம்மா, ஜேபி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை குறித்தும் அதானி குழும நிறுவனங்கள் குறித்தும் செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
* இலங்கையில் அதானி காற்றாலை திட்டம்
அதானி நிறுவனத்தின் இரண்டு காற்றாலை திட்டங்களுக்கு இலங்கை அரசு ஓப்புதல் அளித்துள்ளது. இந்த இரு திட்டங்களும் மொத்தம் ரூ.3657 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இலங்கை அரசின் தொழில் முதலீட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலதிபர் கவுதம் அதானியின் அதானி கிரீன் எனர்ஜி இலங்கையின் மன்னார், பூனேரின் பகுதிகளில் இரண்டு காற்றாலை தீவுகளை அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.