ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார்.
இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பேராசிரியர் ச. ராஜநாயகம் வழிகாட்டுதலில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 39.5 சதவிகித வாக்குகளும், அதிமுக 24.5 சதவிகித வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 9.5 சதவிகித வாக்குகளும், தேமுதிக 2 சதவீத வாக்குகளும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸ் வசம் செல்கிறது. இளம் வாக்காளர்களின் வாக்குகள் 29.5 சதவீதம் நாம் தமிழர் கட்சிக்கும், 28.5 சதவீதம் காங்கிரஸ்க்கும், 17 சதவீதம் அதிமுகவுக்கும், 3 சதவீதம் தேமுதிகவுக்கும் கிடைத்துள்ளது.