ஓபிஎஸ் அருகில் எடப்பாடி பழனிசாமி: சபாநாயகர் அப்பாவு கொடுத்த அப்டேட்!

களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார்.

அதிமுக விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கும் சட்டமன்ற செயல்பாடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தற்போது முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்

குறைந்த பருவமழை!

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யவில்லை. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. 70% குளங்களில் தண்ணீர் இல்லாமல் குளங்கள் வறண்டு உள்ளது. ஒரு சில இடங்களில் விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நெல் பொதி வரும் பருவத்தில் உள்ளது.

வடக்கு பச்சையாறு அணை திறப்பு!

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் வடக்கு பச்சையாறு அணையின் பாசன பகுதிகளான மீனவன் குளம், கருவேலங்குளம், நாங்குநேரி உள்ளிட்ட 15 கிராம பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. பொதி பருவத்தில் உள்ள இந்த நெற்பயிர்களுக்கு தண்ணீர் இல்லாததால் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வடக்கு பச்சை ஆறு அணையிலிருந்து வரும் மார்ச் 31ஆம் தேதி வரை வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டார். இதனை அடுத்து அணையில் இருந்து தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார். இதன் மூலம் 1000 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் .

மார்ச் 31 வரை தண்ணீர் திறப்பு!

தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்குநேரி, கருவேலங்குளம், மீனவன்குளம் உள்ளிட்ட 15 கிராம விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உத்தரவுப்படி வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பொதி வரும் பருவத்தில் உள்ள நெற் பயிரை காப்பாற்ற வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை தண்ணீர் தொடர்ந்து வழங்கப்படும் என்றார்.

அதிமுக விவகாரம்!

அதிமுக விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டப்பேரவைக்கு தனித்துவமான அதிகாரம் உள்ளது. சட்டப்பேரவையை நடத்துவது பேரவை தலைவரின் முழு பொறுப்பு. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கும் சட்டமன்ற செயல்பாடுகளுக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ் இருக்கை மாற்றப்படுமா?

முன்னதாக சட்டமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கையை மாற்ற வேண்டும், அந்த இடத்தில் ஆர்.பி.உதயகுமாரை அமர வைக்க வேண்டும் என்று
எடப்பாடி பழனிசாமி
சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது உச்ச நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்கு வாய்ப்பில்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.