கண்ணீரில் முடிந்த கனவு உலகின் காமெடி நடிகர்கள் வாழ்க்கை!
நகைச்சுவை என்ற சொல்லுக்கு கிண்டல், கேலி, நய்யாண்டி, நக்கல், விகடம், பகடி என சொற்கள் பல உண்டு. அப்படிப்பட்ட நகைச்சுவைக்கு சொல்லாடலும், கால நேர குறிப்பறிதலும் அவசியம்.
பேசும்படம் தொடங்கிய காலம் தொட்டு இன்றுவரை பல நகைச்சுவை கலைஞர்களை தந்த, தந்து கொண்டிருக்கின்ற கலையுலகம் தமிழ் சினிமா. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தொடங்கி இன்றைய யோகி பாபு வரை அவரவர் தனித்தன்மையுடன் சொல்லாடல், உடல் மொழியோடு, ரசிகர்களின் நாடித் துடிப்பறிந்து நல்ல நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்.
இப்படிப்பட்ட நகைச்சுவை நடிகர்களின் தனி வாழ்க்கையில் நகைச்சுவை என்ற ஒன்று இருந்ததா? இருந்திருக்குமா? என்ற கேள்வி பலரிடம் உண்டு. என்எஸ் கிருஷ்ணன் முதல் சமீபத்தில் மறைந்த மயில்சாமி வரை பலர் 50, 60 வயதை கடக்கும் முன்பே காலனின் கைகளில் சிக்கி காற்றில் கலக்க காரணம் என்ன?
என்.எஸ்.கிருஷ்ணன்
நாகர்கோயில் சுடலைமுத்துப்பிள்ளை கிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட என்எஸ் கிருஷ்ணன், தமிழ் திரையுலகின் தனிப்பெரும் நகைச்சுவை நடிகர். ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு, சிந்திக்கவும் வைத்தவர். உலகப் புகழ் பெற்ற சார்லி சாப்ளின் போல சிந்தனை கொண்டு, சிந்தித்தவற்றிற்கு செயல் வடிவம் தந்தவர்.
தர்ம சிந்தனை கொண்ட கொடையாளி. சமூக சீர்திருத்தக் கருத்துக்களை சாகும் காலம் வரை சளைக்காமல் சொல்லிச் சென்றவர். இவர் 49 வயதில் மறைந்தது வேதனை. உலகை மகிழ்விக்க தெரிந்த இந்த உன்னத கலைஞன், தன் உடல் நலத்தின் மேல் அக்கறை கொள்ளாமல் போனது ஏன் என்ற உள்ளக் குமுறல்தான் ஒவ்வொரு தமிழ் ரசிகனின் கேள்வியாக இருக்கும்.
டி.ஏ.மதுரம்
“கலைவாணர்” என்எஸ் கிருஷ்ணனின் மனைவி. 1935ல் வெளிவந்த “ரத்னாவளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 1936ல் வெளிவந்த “வசந்தசேனா” என்ற படத்தில் என்எஸ் கிருஷ்ணனுடன் இணைந்து முதன் முதலில் நடித்து பின் வாழ்க்கைத் துணையுமானார்.
கலைவாணரைப் போலவே இவரும், அறியாமையை போக்கும் சமூக சீர்திருத்தக் கொள்கைகளை தனது பாடல்கள் மூலமாகவும், வசனங்கள் மூலமாகவும் சொல்லி, சினிமா என்ற இந்த ஊடகத்தை சமூக சீர்திருத்த மேடையாக பயன்படுத்திய ஒரு சித்தாந்தவாதி. இந்த அற்புத திரைக்கலைஞரும் 56வது வயதிலேயே அமரரானார்.
டிஎஸ் பாலையா
தமிழ் திரையுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவர். கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என பன்முகத் தன்மை கொண்ட தனித்துவமான நடிப்பாற்றலால் உச்சம் தொட்டவர். ஆரம்ப காலங்களில் சர்க்கஸ் கம்பெனியில் சேர விரும்பி, பின் நாடகத்துறையில் பயணித்து, வெள்ளித்திரையின் வெளிச்சம் கிடைக்கப் பெற்றவர். தூய தமிழ் பேசி நடித்து வந்த நடிகர்கள் மத்தியில், எதார்த்த தமிழ் பேசி நடித்த முதல் நடிகர்.
வித்தியாசமான உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும் நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் கண்டார்.
இவரது நகைச்சுவை நடிப்பில் வந்த படங்கள் ஏராளம் இருந்தாலும், இன்றும் “காதலிக்க நேரமில்லை”, “ஊட்டி வரை உறவு”, “தில்லானா மோகனாம்பாள்” படங்களை யாரும் எளிதில் மறக்க இயலாது. ஒருமுறை இயக்குநர் ஸ்ரீதரிடம் “காதலிக்க நேரமில்லை” படத்தை ரீமேக் செய்ய படத்தின் உரிமையை கேட்க, பாலையா பாத்திரத்தை ஏற்று நடிக்க இப்போது யார் இருக்கின்றனர் என்று கேட்டு, உரிமையை தர மறுத்தார் ஸ்ரீதர். யாராலும் நிரப்ப முடியாத ஒரு இடத்தை விட்டுச் சென்ற இந்த கலைஞனும் 57வது வயதில் மறைந்தார்.
ஜேபி சந்திரபாபு
விஷம் பருகி வெள்ளித்திரையின் வெளிச்சம் கிடைக்கப் பெற்றவர் இவர். நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை கொண்டு வந்த பெருமை இவருக்குண்டு. யாரையும் “சார்” என்று அழைக்கும் வழக்கம் இல்லாதவர்.
அந்தஸ்தில் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர்களது பெயர்களுக்கு முன்னால் “மிஸ்டர்”, “மிஸ்”, “மிஸஸ்” என சேர்த்து அழைப்பதே இவரது வழக்கம். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இவர் கட்டிய வீட்டில், தரை தளத்திலிருந்து இரண்டாவது தளத்திற்கு காரிலேயே செல்லும்படி கட்டி பிரமிப்பூட்டியவர்.
தேர்ந்த நகைச்சுவை நடிப்பாலும், வித்தியாசமான நடன அசைவுகளாலும், தனது குரலினிமையாலும் கொடிகட்டிப் பறந்த இந்த கலைஞன், அளவுக்கு அதிகமாக மது அருந்தி மஞ்சள் காமாலை நோயால் பாதிப்புக்குள்ளாகி மரணத்தின் மடியில் 46வது வயதில் சாய்ந்தார்.
தேங்காய் சீனிவாசன்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன், கதாநாயகன் என அனைத்திலும் பரிமளித்தவர் இவர். இவரது உடல்மொழி, வசன உச்சரிப்பு மற்ற நடிகர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு தமிழ் ரசிகர்களை ஈர்த்தது. ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வலு சேர்த்தவர்.
அர்த்தமே இல்லாத வார்த்தைகள் கூட இவரது நாவில் உச்சரிக்கப்பட்டு ரசிக்கப்பட்டதோடு, பின்னாளில் வந்த சின்னி ஜெயந்த் போன்ற நகைச்சுவை நடிகர்களும் அந்த பாணியை கையில் எடுத்து வெற்றியும் கண்டனர்.
இவர் நடித்த “தில்லு முல்லு” திரைப்படத்தின் நாயகன் ரஜினியாக இருந்தாலும், இவரது கதாபாத்திரமும், நகைச்சுவை நடிப்பாற்றலும், தேர்ந்த உடல் மொழியோடு கூடிய வசன உச்சரிப்பும் ரசிர்களை கவர்ந்தது. இவரும் அமரரானது 50வது வயதில்.
சுருளிராஜன்
வித்தியாசமான முக பாவங்களோடும், வசன உச்சரிப்புகளோடும், உடல் மொழியோடும் நகைச்சுவை நடிகராக கோலோச்சியவர். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை தமிழ் திரையில் அதிகம் பிரதிபலிக்கச் செய்தவர். “மாந்தோப்புக் கிளியே” படத்தில் இவர் ஏற்று நடித்த “கஞ்சப் பிரபு” கதாபாத்திரத்தை ரசிகர்கள் எளிதில் மறக்க இயலாது. 80களின் தொடக்கத்திலேயே, குடி என்ற கோரப்பிடியில் சிக்கி மரணித்திபோது வயது 42 மட்டுமே.
விவேக்
கலைவாணர் என்எஸ் கிருஷ்ணனுக்குப் பிறகு திரைப்படத்தில் சீர்திருத்தக் கருத்துக்களை துணிவோடு கூறியவர் இவர். மூட நம்பிக்கைகள், லஞ்ச லாவண்யங்கள், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் அவலங்கள், அரசியலில் நிலவும் ஊழலை நகைச்சுவை நடிப்பில் வசனங்களாக உதிர்த்து விழிப்புணர்வை தந்தவர்.
சமூக சீர்திருத்த கருத்துக்களை சினிமாவோடு விட்டுவிடாமல், நிஜ வாழ்விலும் கடைப்பிடித்து வந்தவர் நடிகர் விவேக். நாட்டின் வறட்சிக்கு காரணம் மழையின்மை. மழையின்மைக்கு காரணம் மரங்களின் அழிவு. மரங்களின் அழிவுக்கு காரணம் நாம். எனவே செழிப்பான நாட்டை உருவாக்க நாடு முழுவதும் மரம் நடவேண்டும் என்று கூறி, நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாழ்வில் சாத்தியப்படுத்தி வந்ததோடு, பிறருக்கு ஒரு வழிகாட்டியாகவும் வாழ்ந்து மறைந்தவர். இவர் இறந்தது 59வது வயதில்.
மயில்சாமி
சிவபெருமானின் தீவிர பக்தரும், எம்ஜிஆரின் தீவிர ரசிகருமான இவர், கொடைத்தன்மையை ஒரு கொள்கையாகவே கடைபிடித்து வாழ்ந்தவர். சினிமா என்ற வெளிச்சத்தையும் கடந்து, பொதுநலம் கருதி, சமூக அக்கறை கொண்டு மக்களோடு மக்களாக வாழ்ந்து மறைந்தவர். “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற எம்ஜிஆரின் பாடல் வரிகளுக்கேற்ப, அவருடைய ரசிகரான இவர், சென்னையின் மழை வெள்ள காலங்களிலும், கொரோனா காலங்களிலும் பிறர் துயர் துடைக்கும் வண்ணம் விளம்பரம் ஏதுமின்றி உதவிக்கரம் நீட்டி பணியாற்றினார். இவர் உயிர் பிரிந்ததும் 57 வயதில்.
சினிமா என்ற ஊடகத்தின் மூலம் மக்களை மகிழ்வித்து, அவர்களது மனங்களில் இடம் பிடித்து, மாசற்ற புகழோடு வாழ்ந்து மறைந்த இந்த திரைச்சிற்பிகளின் உயிர் அற்ப வயதில் சொற்பமென போனதன் காரணத்தை காலத்தின் கைகளில் ஒப்படைத்து, கனத்த இதயத்தோடுதான் கடந்து கொண்டிருக்கின்றது நம் கலையுலகம்…